என்றென்றும் நன்றியுடன்

என்றென்றும் நன்றியுடன்… கே.எஸ்.ஜீவா, நாகரத்னா பதிப்பகம், 3ஏ, டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர், பெரம்பூர், சென்னை 11, பக்கங்கள் 96, விலை 70ரூ.

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரை உதவி இயக்குநராக, இயக்குநராக, கதை, திரைக்கதை ஆசிரியராக அவருடைய ஆளுமையைக் காட்டும் நூலாக மட்டும் இந்நூலைப் பார்க்க முடியாது. தமிழ் சினிமாவின் ஒரு அத்தியாயமாக வைத்துப் பார்க்க வேண்டிய தகுதியுடன் நூல் ஆக்கம் பெற்றுள்ளது. ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களை இயக்குவதால் மட்டும் இந்த உயரத்தை அவர் எட்டவில்லை. புதிய புதிய இயக்குநர்களை உருவாக்கிய ஒரு களமாக, அவர்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசானாகவும் பரிணமித்ததுதான் இந்த உயர்வு. யாருக்கும் எளிதில் மனம் வராத சினிமாத் துறை இது. படையப்பா முதல் ஆதவன் வரை கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக இருந்த ஜே.டி.ஜீவா, கே.எஸ்.ரவிகுமாரின் இயக்குநர் பயணத்தைப் படைத்திருப்பது பொருத்தமானதாகப்படுகிறது. நன்றி: குமுதம், 30 ஜனவரி 2013.

—-

 

தாய் மூகாம்பிகை, கவிஞர் பிறைசூடன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்கங்கள் 176, விலை 110ரூ.

தாய் மூகாம்பிகையின் அருள்பெற்ற கவிஞராக பிறைசூடன் மிளிர்கிறார். தாய் மூகம்பிகை பற்றிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். குமுதம் பு(து)த்தகம் வெளியீடாக மலர்ந்துள்ளது. கவிதைகளில் தாயிடம் எல்லாம் கேட்கிறார். எல்லோருக்காகவும் கேட்கிறார். சமூக அவலங்களை களைய வேண்டுகிறார். மக்கள் நலனுக்காக ஏங்குகிறார். எல்லோருக்கும் எல்லாம் அமைய வேண்டுகிறார் முட்டவரும் காளைக்குக் கொம்பு வைத்தாய், நன்றி கெட்ட மனிதருக்கோர் அடையாளம் நல்லவளே நானறிய என்ன வைத்தாய் என்று கேட்கிறார். சந்த நயம், எதுகை, மோனை என்று எளிய இசைக்கோர்வையாய் கவிதைகள் படிக்கப் படிக்க மனதை உருக்குகின்றன. நன்றி: குமுதம், 30 ஜனவரி 2013.

—-

 

மாறுபடும் எண்ணங்களும் மாறுபடா கோடுகளும், கவிஞர் க. சிவசுப்பிரமணியன், 7, Vicoria close. Hayes middle sex. UB32 PW. London, UK.

சாம்பல் மேடாய் அடையாளப்பட்டுக் கிடக்கும் 2009 முள்ளிவாய்க்காலின் இன்னல்கள்தான் இக்குறு நாவலின் உள்ளடக்கம். ஈழக்குடிகளின் இன்னல்களை இந்தளவு யாரும் விவரித்ததில்லை. அடைந்தால் தமிழ் ஈழம், அதுவன்றேல் ஜெயமரணம் என்ற மாவீரர் கனவுகளின் நனவிற்கு ஒரு துளி பங்களிப்பையேனும் இந்நாவல் ஏற்படுத்துமாயின் அதுவே தனக்குக் கிடைத்த பாக்கியமாய் கருதும் நாவலாசிரியரின் எதிர்பார்ப்பு நியாயமானதே. 51 பாகங்களாய் நாவல் விரிவடைகிறது. கூடவே சின்னஞ்சிறு கதைகள் 50-ம் ஈழ மண்வாசனையோடு படைக்கப்பட்டுள்ளன. நன்றி: குமுதம், 30 ஜனவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *