காற்றின் கையெழுத்து

காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 130ரூ.

ஒரு பத்திரிகை நின்று போனது குறித்து எழுதும்போது… எழுத்தாளர் சுஜாதா, ‘நிகழ் காலத்தைப் பிரதிபலிக்காத எதுவும் நிலைக்காது’ என்று சொன்னார். பத்திரிகைகளுக்கு மட்டுமல்ல… படைப்பாளிக்கும் அது பொருந்தும். சினிமா பாடலாசிரியராக இருந்தாலும் பழநிபாரதிக்குள் இருக்கும் ‘சமூகன்’ கொடுக்கும் சாட்டையடிகள்தான் இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள். வளரும் நாடுகளை உய்விக்க வந்ததாகச் சொல்லப்படும் உலகமயமாக்கல், பாரம்பரியத்தை நசுக்கி அன்னிய நாட்டிடம் கையேந்தி நிற்கும் நிலை ஆகியவற்றைக் காட்டுவதாகவே இந்த தொகுப்பின் மொத்தக் கட்டுரைகளையும் வகைப்படுத்த முடியும். “நமது கேழ்வரகு ரொட்டியை இத்தாலியின் ‘பீட்சா’ கிண்டலடிக்கிறது. நமது இளநீரை அமெரிக்காவின் கோக் கேலி செய்கிறது. இந்த மண்ணையும் மண்ணின் உணவையும் பண்பாட்டையும் மறந்து பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை செய்கிற மனிதர்களே இங்கு வாழ்வைத் தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்ற நிலை உருவாகும்போது தமிழ் மட்டுமே அறிந்து தமிழர்களாக மட்டுமே வாழ நினைக்கிற நாம் என்ன செய்யப் போகிறோம்? ‘பயன்படுத்து, து¡க்கியெறி’ என்பது பன்னாட்டு நிறுவனங்களின் பண்பாட்டுச் சுலோகம். குடித்து முடித்து எறியப்படும் கோகா கோலா டின்களாக – மூன்றாம் உலக நாடுகளில் கொண்டு வந்து கொட்டப்படும் ரசாயனக் கழிவுகளாகத்தான் ஏழைகள் எப்போதும் இருக்கிறார்கள்’ என்ற பழநிபாரதியின் வார்த்தைகளுக்குள் 20 ஆண்டு வரலாறு இருக்கிறது. ஒபாமாவுக்கு மசால் தோசை பிடிக்கும் என்கிறது ஒரு பெட்டிச் செய்தி. ஆனால் இன்று பெட்டிக் கடைகளில் பர்கர் லைக் பண்ணி… பிட்ஸா டேக் பண்ணி… கோக் ஸிப் பண்ணுவதுதான் ஃபேஷன் என்பதை ஒபாமா அறிவாரா எனத் தெரியவில்லை. குழம்பு, தயிர் எனப் பிசைந்து சாப்பிடுவதுகூட இன்றைய பார்வையில் கேவலம் என்று ஆகிவிட்டது. நு¡ற்றாண்டுகளுக்கு முன், தென்னிந்தியா வந்த வெளிநாட்டு யாத்திரிகன் மார்கோபோலோவுக்கு நம்முடைய வாழை இலை பிடித்தது. அதை நாம் இன்று பிளாஸ்டிக் ஆக்கி விட்டோம். உணவு, உடை, வாழ்க்கை முறை அனைத்தையுமே விளம்பரங்கள் தீர்மானிக்கின்றன. இவை அனைத்தையுமே வார்த்தைகளால் வறுத்தெடுக்கிறார் பழநிபாரதி. ‘மனிதர்களின் அறிவைக் கைது செய்து, பணத்தை உருவாக்கும் அறிவியல்தான் விளம்பரம். இதிலிருந்து விடுபடும்போதுதான் ஒரு சமூகத்தின் நிஜமான தேவைகள் தெரியவரும் என்ற கனடா சமூக அரசியல் பண்பாட்டறிஞர் ஸ்டெபன் லீகாக்கின் கருத்தையும் மேற்கோள் காட்டி எழுதுகிறார். நகரத்து மனிதர்கள் பலரிடமும் ஒரு விஷயத்தை நான் அடிக்கடி கவனிக்கிறேன். அவர்கள் எதையோ உளறிக்கொண்டே போகிறார்கள்… வருகிறார்கள். அவர்களது கைகளில் செல்பேசியும் இல்லை. அவர்கள் யாரோடு பேசுகிறார்கள் என்றும் தெரியவில்லை. நகராத வாழ்க்கையின் மனப்பிறழ்வை அவர்கள் நகரத்தோடு பேசிக்கொண்டே நகர்கிறார்கள். சென்னையின் புறநகர்களில் உள்ள தீம் பார்க்குகளில் ‘ராட்சஸ தாலாட்டு‘ என்றொரு விளையாட்டு உண்டு. அது அந்தரத்தில் அசுரத்தனமாகப் பிள்ளைகளைத் தாலாட்டும். பயந்த குழந்தைகள் ‘அய்யோ, அம்மா’ என்று அலறுவார்கள். ஆனாலும் பாதியில் இறங்க முடியாது. சென்னைக்குப் பிழைக்க வந்த பலருக்கும் நகரம் பாடுவது அப்படியொரு ராட்சஸ தாலாட்டுத்தான்‘ என்று பழநிபாரதி சொல்லும் நடுத்தர வர்க்கம் குறித்த சித்திரம் எத்தனை எதார்த்தமானது. – புத்தகன் (நன்றி: ஜுனியர் விகடன், 28.08.12) ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/100-00-0000-483-1.html

Leave a Reply

Your email address will not be published.