தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம், எஸ்.ஏ.எம். பரக்கத் அலி, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 600002, விலை ரூ. 85.

To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-394-6.html

இந்த தேசத்தில் மிக மர்மமான முறையில் பல கொலைகள் நடக்கின்றன. அதில் செத்துப்போனவர்களில் பலர் தகவல் உரிமைப் போராளிகளாக இருக்கிறார்கள். வாழ்க்கைத் தரத்தில் வறுமைக் கோட்டைத் தொடும் நிலையில் இருக்கும் இவர்களைக் கொல்ல வேண்டிய அவசியம் பெரிய முதலைகளுக்கு, அரசியல் தாதாக்களுக்கு ஏன் வருகிறது என்று கண்டுபிடிக்க முடியாமலேயே இந்தக் கொலைச் சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன.

ஒண்டுக்குடித்தன வீட்டுக்குள் ஒதுங்கி வாழ்ந்து வரும் தகவல் உரிமைப் போராளிகள், அரசாங்கத்திடம் எழுதிக் கேட்கும் விஷயங்கள்… அந்தப் பெரிய மனிதர்களின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்ப்பதுதான் காரணம். அரசு அலுவலகங்களின் அறைகளுக்குள், ரகசிய பங்களாக்களின் திரைமறைவில் நடக்கும் டீலிங்குகள்… பத்தோடு பதினொன்றாக ஓர் ஓரத்தில் வெறும் ஃபைல்களாக முடக்கிவைக்கப்பட்டதை… கேள்விகளாய் கேட்டு மூன்றாம் நபர் பெறுவதை எந்த அதிகார வர்க்கம் அனுமதிக்கும்? ஆனால், காலம் அப்படிப்பட்ட ஒரு சலுகையை பல ஆண்டுகள் கழித்து வழங்கியது. அதற்குப் பெயர்தான், தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தின் இருட்டு அறைகளுக்குள் நுழைந்து கேள்வி கேட்டு தகவல் பெறும் போராளிகள், இந்தியா முழுவதும் எத்தனையோ பேர் எழுந்தனர். அதில் ஒருவரும், பத்திரிகையாளருமான எஸ்.ஏ.எம். பரக்கத் அலி எழுதிய புத்தகம் இது.

சட்டத்தைப் பயன்படுத்துவதைவிட, சட்டப் புத்தகத்தைப் படிப்பது கடினமானது என்பார்கள். ஆனால், இந்தப் புத்தகம் அப்படி இல்லாமல், சம்பவங்களின் சுவாரஸ்யமான தொகுப்பின் ஊடாக சட்டத்தைப் பயிற்றுவிப்பதாக இருக்கிறது.

தமிழ்நாட்டு அரசாங்கம் விலை கொடுத்து வாங்கிய ஹெலிகாப்டரை சும்மா நிறுத்திவைக்க ஆண்டுதோறும் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது முதல், மந்திரிகளின் வீடுகளுக்கு அரசாங்கம் செலுத்தும் மின்கட்டணம் வரை அனைத்தையும் பொதுமக்கள் கேள்வியாகக் கேட்கலாம். ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டாலும் நிராகரித்தாலும் அதற்கான உண்மையான காரணத்தைக் கேட்டுப் பெறலாம். ஊழலைத் தடுத்து நிறுத்த, ஆட்சியாளர்களுக்குப் பொறுப்பை உணர்த்த, அரசு நிர்வாகத்தில் ஒளிவுமறைவு இன்மையை வெளிப்படுத்த உருவாக்கப்பட்ட இந்தச் சட்டத்தை, ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்த ஆரம்பித்தால், முறைகேடு முழுமையாய்க் குறைந்துபோகும்.

ஓட்டுப் போடுவதற்கான வாக்குச்சீட்டை ஒவ்வொரு மனிதனிடமும் தேர்தல் தருகிறது. அவர்கள் ஒழுங்காய் ஆட்சி செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும் கேமராவாக இந்தப் புத்தகம் இருக்கிறது.

– புத்தகன் நன்றி: ஜூனியர் விகடன் 14-10-12      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *