தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு

தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு, ஐ. ஜோப் தாமஸ், காலச்சுவடு, பக். 264, விலை 475ரூ.

கலை வரலாற்றை ஆவணப்படுத்த முடியும் நம் வரலாற்றை நாம் தெரிந்து வைத்துகொள்வதில் இருக்கும் ஆர்வத்தை விட, மேலைநாட்டு வரலாற்றை ஆய்வாளர்களுக்கு ஆர்வம் அதிகம். தென்னிந்திய கலை குறித்த ஆய்வு ஆவணங்கள் குறித்து வெளிவந்த ஆங்கில நூல்களோடு, இதுவரை வெளிவந்துள்ள தமிழ் நூல்களை ஒப்பிட்டால் ஏமாற்றமே மிஞ்சும். இந்திய மண்ணில் ஓவியங்கள் குறித்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன. ஆனால் தமிழக மண்ணில் இதுவரை ஓவியங்கள், கலை செய்லபாடுகள் பற்றிய ஆய்வுகள், வரலாற்று ரீதியான நூல்கள், குறிப்பிடும்படியாக எதுவுமில்லை. இந்த நூல், அந்த குறையை போக்கி உள்ளது. இந்த நூலில், வெறுமனே புராணங்களின் உதவியை மட்டும் நாடாது, இலக்கியங்களில் இருந்தும், ஆசிரியர் தகவல்களை திரட்டி தந்திருக்கிறார். இந்திய மண்ணில் வேறெந்த பிராந்தியங்களையும் விட, இலக்கிய செறிவு மிக்க தமிழக மண்ணில், கலை வரலாற்றை சிறந்த முறையில் ஆவணப்படுத்த முடியும் என்பதை இந்த நூல் நிரூபித்திருக்கிறது. இதற்காக, சங்க இலக்கியங்களில் இருந்தும், விஜயநகரக் காலகட்டத்தில், சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மதுரா விஜயம் நூலில் இருந்தும், விவரணைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. காலவரிசைப்படி, தமிழகத்தில் உருவாக்கப்பட்ட ஓவியங்களை தொகுத்திருக்கிறார் ஆசிரியர். அதே நேரம் 1350-1650 காலகட்டங்களில் உருவான ஓவியங்களை வைத்து தாம் எழுதிய, ஆய்வுக்கட்டுரையின் அடிப்படையில் எழுதிய நூல் என, இதை குறிப்பிடுகிறார். என்றாலும் 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கம்பெனி மற்றும் காலனிய காலத்து ஓவியங்களையும், ஓவியர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றையும் விவரிக்கிறார். வரலாற்றுக்கு முந்தைய கலை படைப்புகள் பற்றிய இவரது எளிமையான விவரணைகள், ஆய்வுகளின் மதிப்பீடுகள், மிக முக்கியமான வரலாற்றாசிரியர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான ஓவியங்களின் நிழற்படங்கள் மற்றும் விளக்க படங்கள், அழிவு நிலையில் உள்ள பல கலை படைப்புகள் பற்றிய தகவல்கள் என, மிக அரிய தகவல்களையும் அள்ளி தந்திருக்கிறார். அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய நூல் இது என்பதில், சந்தேகமேதும் இல்லை. -ஜீவகரிகலான். நன்றி: தினமலர், 26/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *