திருவகுப்பு, வேல், மயில், சேவல், விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை

திருவகுப்பு, வேல், மயில், சேவல், விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை, தெளிவுரை ம. ராமகிருஷ்ணன், திருப்புகழ்ச் சங்கமம் வெளியீடு, சென்னை 90, பக்கம் 232, விலை 120 ரூ.

முனைவர் ம. ராமகிருஷ்ணன், திருப்புகழ் நெறி பரவுதற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆன்மிகப் பணியில் தற்போது முழுமையாக ஈடுபட்டுள்ள இவர், ‘வரிசைதரும் பதம் அதுபாடி வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே’ என்னும் அருணகிரிநாரின் வரத்தைப் பெற்றவர். ஒரே பொருளை பலவிதமாக வகுத்தும், தொகுத்தும், சொல்லும் நூல் வகைக்கு வகுப்பு என்று பெயர். இதில் சீர்பாத வகுப்பு துவங்கி, திருப்பரங்கிரி வகுப்பு ஈறாக 25 வகுப்புகளுக்கு தெளிவுரையும், வேல், மயில், சேவல் விருத்தங்களுக்குத் தெளிவுரையும் வழங்கப்பட்டுள்ளன. சித்திரக் கவிகளில் ஒரு வகையான, ‘ஏழு கூற்றிருக்கை’ ரதபந்தத்தில் அமையப்பெற்றது. நக்கீரர், திருஞானசம்பந்தர், திருமங்கையாழ்வார், ஆகியோர் அருளிய திருவெழகூற்றிருக்கைகளிலிருந்து (தேர் உருவம்) அருணகிரி நாதரின் படைப்பு சிறிது மாற்றம் பெற்றுள்ளதையும் நூலாசிரியர் நுணுக்கமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். மரபுக்கவிதை படைக்க விரும்பும் கவிஞர்களுக்குப் பயன்படக்கூடிய நூல். தவிரவும் திருப்புகழ் அன்பர்கள் விரும்பிப் படிக்கக்கூடிய அருணகிரிநாதரின் ஆன்மிக இலக்கிய நூலிது. – பின்னலூரான்

ஆத்துக்குப் போகணும், நாவல், காவேரி, காலச்சுவடு பதிப்பகம், 669,கே.பி,கோவில் தெரு, நாகர்கோவில் 629001,  பக்கம் 166, விலை 125 ரூ. ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-810-5.html

‘காவேரி‘ எனும் பெயரில் லஷ்மி கண்ணன், தமிழ், ஆங்கிலத்தில் எழுதும் இருமொழி எழுத்தாளர். இவருடைய நூல்கள் இந்தி மொழிகளிலும், மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஒரு தமிழ்நாட்டு மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த படித்த, வேலைக்குப் போகும் பெண்களின் ஆசை, நிராசை, அபிலாசை, ஏமாற்றம் ஆகியவற்றைப் பற்றி அதிகம் சிந்திக்கும் ஒரு எழுத்தாளரின் படைப்பு இந்த நவீனம். குடும்ப வாழ்க்கை என்பது அவளது இயல்பான முன்னேற்றம் வளர்ச்சிக்கு முன், குறுக்கே தடையாக இருக்கிறது என்ற சிந்தனையை வெளிப்படுத்தும் இந்த நவீனத்தில் ஏற்கத் தக்கன, ஏற்கத் தகாதவை என, பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. பெண்ணியம், பெண் விடுதலை என்ற விஷயங்கள் வெகுதூரம் பயணித்துவிட்டன. வேகம், விவேகம், நிதானமின்மை,யதார்த்த்தை உதாசீனப்படுத்தும் போக்கு, என பயண வழியில் பல வேகத்தடைகள். அழுத்தி வைக்கப்பட்டு, ஒடுக்கி வைக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட பெண் இனம். களைய வேடிய சங்கிலிப்பிணைகள் இன்னமும் ஏராளம் உள்ளன. காயத்ரியும், ரமாவும், சங்கரும், துரையும், அரவிந்தும், கிரிஜாவும் என வெவ்வேறு சிந்தனை வயப்பட்டவர்களின் வாழ்க்கையில் எங்கோ, ஏதோ ஒரு பிணைப்பு விசை இருக்கிறது. அந்த விசையைத் தேடி நகர்கிறது நவீனம். கடைசியில் சித்தார்த் என்ற குழந்தையின், மழலை முன் வாழ்க்கையின் சிக்கல்கள் எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாகிவிடுகிறது. ஒரு தலைமுறைப் பெண் இனம் அழுதுகொண்டே இருந்துவிட்டது. அடுத்த தலைமுறையோ விழிப்புற்றுப் போராட துவஜம் கட்டிக்கொண்டு நிற்கிறது. இந்த வித்தியாசமான வாழ்க்கைச் சூழலை இலக்கியமாகப் பதிவு செய்ய, காவேரியில் போன ஆன்மாவின் துணையை நாடுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவல் இது. இன்னும் 40 ஆண்டுகளுக்கு வாசிக்கப்படும். – ஜனகன். நன்றி: தினமலர், 23 அக்டோபர் 2012.

Leave a Reply

Your email address will not be published.