வெல்லுங்கள் இந்த வழிச் செல்லுங்கள்

வெல்லுங்கள் இந்த வழிச் செல்லுங்கள், மனிதவள மேம்பாடுட நிபுணர் மல்லியம் வெ. ராமன், புத்தகச் சோலை, மயிலாடுதுறை, விலை 80ரூ.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடிப்பவர்கள் படிக்க வேண்டிய நூல் இது. மனிதவள மேம்பாட்டு நிபுணரான மல்லியம் வெ. ராமன் வெற்றியின் ரகசியத்தை எளிய தமிழில் சுவைபட எழுதியுள்ளார். வெற்றியடைய வேண்டுமானால் முதலில் தேவை வெற்றி மனப்பான்மை. நிதானமாக, பொறுமையாக, அதே சமயம் விடாப்பிடியாகத் தொடர்ந்து லட்சியத்தை நோக்கி நடந்தால், ஒருநாள் வெற்றி சாத்தியமாகும் என்கிறார் ஆசிரியர். இது இவருடைய முதல் நூல் என்பதை நம்ப முடியவில்லை. சிறந்த கருத்துக்களை பக்கத்துக்கு பக்கம் வழங்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 31/12/2014.  

—-

அம்ருதா, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, விலை 335ரூ.

தென்னகத்தையும் கிழக்காசியப் பகுதிகளையும் ஒரு குடையின் கீழ் ஆண்டு வந்த கங்கை கொண்ட ராஜேந்திர சோழச் சக்கரவர்த்தியின் மகள் வயிற்றில் பிறந்த குலோத்துங்கள் இந்த அகண்ட பரந்த சோழ தேசத்து ஆட்சியை எப்படித் தன் வசம் கொண்டு வந்தான் என்பதைக் கூறும் வரலாற்று நாவல். பெண்களை அரசியல் பகடைக்காய்களாக பயன்படுத்தும் விக்கிலன் போன்றோரையும் ஜாதி கலவரங்களைத் தூண்டி அதன் மூலம் ஆதாயம் காண விழையும் ஜனநாதன், மணவாளன் முதலியோரையும் எதிர்கொண்டு வெற்றி பெற தகுதி வாய்ந்ததொரு அரசனாக அபயன் பரிமளிக்கிறார். அவரது உற்ற நண்பனாக வரும் நாராயணன் வீரதீரத்திலும், அறிவிலும், சாதுர்யத்திலும் கவர்கிறார். மிக தைரியமான அம்ருதாவையும், இளகிய மனம் கொண்ட இளவழகியும், மருத்துவ சேவையில் நிகரற்ற மலையவாசினியும், துன்பத்தையே வாழ்வாக பெற்ற யாமினியும் மனத்தைவிட்டு அகலாத பாத்திரங்கள். ஆங்காங்கு பல்வேறு சரித்திர ஆதார குறிப்புகளுடனும், தனது கற்பனையையும் அழகுற கலந்து ஆசிரியர் திவாகர் அருமையான சரித்திர புதினத்தை படைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 31/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *