மௌனியின் கதைகள்

மௌனியின் கதைகள், தொகுப்பாசிரியர் கி.அ.சச்சிதானந்தம், சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 192, விலை 110ரூ.

மௌனி தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் அசல் தொடக்கப்புள்ளி. அவர் எழுதி வெளிவந்துள்ள 24 சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 13 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. நுட்பமான பார்வைகள், மன விகசிப்புகள், துல்லியமான உணர்வுகள், வியக்க வைக்கும் படிமங்கள் இவைதான் மிகுதியும் இக்கதைகளில். தன்னைச் சந்திக்க வரும் நண்பனிடம் தனது காதல் அனுபவத்தை விவரிக்கும் அழியாச்சுடர் விரும்பாத நண்பனுடன் பயணம் செய்ய நேர்ந்துவிடும் ஒருவனின் மனவோட்டங்களைப் பதிவு செய்யும் அத்துவான வெளி, இரவு நேரப் பேருந்தைத் தவறவிட்ட ஓர் இளைஞனும் ஓர் இளம் பெண்ணும் அறிமுகமாகி நண்பர்களாவதைப் படம்பிடிக்கும் குடை நிழல் போன்ற எல்லாக் கதைகளுமே ஆழமானவை. மௌனி மொழியைக் கையாள்வது நம்மைப் பிரமிக்க வைக்கிறது. பட்டமரம் விரிக்கப்பட்ட சாமரம் போன்று ஆகாய வீதியைச் சுத்தம் செய்கிறது. காலம் அவள் உருவில் அந்த சந்தியில் சமைந்து நின்றுவிட்டது. அவள் பார்வையில் மாசு படிந்தது. யோசனைகள் யோசிக்கும்போது யோசிக்கப்படுவதாலேயே மாறுதல் அடைகின்றன போன்ற வாக்கியங்கள் திகைக்க வைக்கின்றன. இந்நூலின் தொகுப்பாசிரியருக்கு மௌனி கொடுத்த ஒரு பேட்டியும் இத்தொகுப்பில் இடம் பெற்றிருப்பது சிறப்பு. அதில் என் கதைகள் மணிக்கொடியில் வெளிவந்தது ஒரு எதேச்சையான சம்பவமே என்று மௌனி கூறியிருக்கிறார். மௌனி எழுதி வெளிவந்தவை 24 சிறுகதைகள் என்றாலும், அச்சேறாமல் இருப்பவை இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் என்பது வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் தகவல்.ஒரு போர்க்கால அடிப்படையில் அவை அச்சேற்றப்பட வேண்டும். நன்றி: தினமணி, 14/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *