வைரமணிக் கதைகள்
வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை 20, பக். 418, விலை ரூ.450
பல்வேறு இதழ்களில் வெளிவந்த நூலாசிரியரின் 80 சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகளின் களங்கள் கிராமத்து மண்ணின் மீதே என்றாலும் நகர்ப்புறங்களின் அனுபவச் சாயல்களும் சில கதைகளில் உண்டு. அகல், அவள் மற்றம் அம்மா சிறுகதையில் வரும் காங்சனாவின் பண்பு யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டது. வழிகாட்டும் ஒளியாகக் காஞ்சனா இருப்பதையும் தனது மனமே தவறாகச் சஞ்சலப்பட்டதையும் அழகிரி உணர்வதாகக் காட்டியிருக்கும் பாங்கு எழுத்தாளரின் எழுத்தாளுமையைக் காட்டுகிறது. ஆட்டோ சிறுகதை நகர்ப்புற, நடுத்தரப் பெண்களின் பிரச்சினையைப் பெண்ணியப் பார்வையில் எடுத்துரைக்கிறது. நிஜமாகவே நடக்கும் சம்பவம் நுகத்தடி கதையில் கலங்க வைக்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பால் மறதி கதையில் மடி சுரக்காது அவதிபப்டும் பசு மாடு சிகிச்சை பலனின்றி இறந்துவிடுகிறது. ஒரு மகத்தான விடுதலையை அனுபவிப்பது போன்று மாட்டின் கண்களில் ஒரு நிம்மதி தென்பட்டது என்று கதையை முடித்து மாட்டுக்குச் சொந்தக்காரனை மட்டுமல்லாது, நம்மையும் விம்ம வைத்துவிடுகிறார் கதாசிரியர். கொடியேற்றம் ஒரு தொடக்கம் ஒரு முடிவு, இசை நாற்காலி ஆகிய வித்தியாசமான கதைகளும் வாசகர்களைக் கவரும். அன்றாடம் வாழ்வில் எதிர்படும் நபர்கள் பல சிறுகதைகளில் கதாபாத்திரங்களாக அமைந்திருப்பது சுவாரசியமான வாசிப்புக்கு வழி வகுக்கிறது. நன்றி: தினமணி, 18/11/13.
—-
எழுத்தாளர் பதிப்பாளர் விற்பனையாளர், மெர்வின், 350, 37வது தெரு, டி.வி.எஸ்.அவென்யூ, அண்ணாநகர் மேற்கு, சென்னை 101, விலை 80ரூ.
புத்தகங்கள் வெளியிடுவதில் முக்கிய பங்காற்றும் இந்த மூன்று தரப்பினர் இடையேயும் பல்வேறு பிரச்சினைகள் உண்டு. குறிப்பாக, எழுத்தாளர்களுக்குத் தரவேண்டிய சன்மானத்தை (ராயல்டி) பதிப்பாளர்கள் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உண்டு. இதுபற்றியெல்லாம் அலசி, ஆராய்ந்து, பதிப்புத்துறையில் உள்ள பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் கூறுகிறார் அனுபவம் மிக்க எழுத்தாளர் மெர்வின். நன்றி: தினத்தந்தி, 4/12/13.