அரியணையில் ஏறிய பொய்கள்,

அரியணையில் ஏறிய பொய்கள், எஸ்.ஆரோக்கியசாமி,  பக்.296, விலை ரூ.220.

தற்போது காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நூலாசிரியர், அதற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்டிருக்கிறார். மின்வாரியத்தில் வேலை செய்திருக்கிறார். தொழிற்சங்க இயக்கத்திலும் தீவிரமாகச் செயல்பட்டிருக்கிறார். பொதுவாழ்க்கையில் நூலாசிரியருக்குக் கிடைத்த அரிய அனுபவங்கள் இந்நூலில் சுவையாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியலில் மிக உயர்வானவர்களாகக் கருதப்பட்டவர்கள், கருதப்படுகிறவர்களுடன் கிடைத்த அனுபவங்களை எந்தவிதத் தயக்கமும், அச்சமும் இல்லாமல் நூலாசிரியர் வெளிப்படுத்தியிருக்கிறார். சில அரசியல் தலைவர்களைப் பற்றி அவர் கூறும் செய்திகள், ‘இவரா? இப்படி?’ 39, என்று நினைக்கும் அளவுக்கு அதிர்ச்சி தரக் கூடியவையாக உள்ளன.

இடதுசாரி அமைப்புகளின் குறைகளாக நூலாசிரியர் கூறுகிற பல விஷயங்கள் சிந்திக்க வைக்கின்றன. அவற்றில் ஓரளவு உண்மை இருந்தபோதிலும், அவற்றை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளாக அவை இல்லாமல், கண்டனங்களாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதேவேளையில் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலரின் பெருமைகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

நூலாசிரியரின் தேசியம் பற்றிய பார்வை, சமூக முன்னேற்றம், தொழில் வளர்ச்சி பற்றிய பார்வை, தனிமனித ஒழுக்கம் பற்றிய பார்வை, நேர்மை, லஞ்சம் வாங்காமை போன்றவை பற்றிய அவருடைய கருத்துகள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

தமிழக அரசியல் கட்சிகளை, அரசியல்வாதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் பயன்படும் நூல்.

நன்றி: தினமணி, 26/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *