கண் தெரியாத இசைஞன்
கண் தெரியாத இசைஞன், விளாதீமிர் கொரலேன்கோ, தமிழில் – ரா. கிருஷ்ணையா, ஜீவா பதிப்பகம், பக். 286, விலை ரூ.200,
அளவில் நூல் பெரிதல்ல என்றாலும் ரஷிய நாவல்களில் வாசித்த அல்லது வாசிக்கப் போகும் ஒவ்வொருவரையும் மறக்க முடியாமல் வைத்திருக்கச் செய்யும் பிரம்மாண்டமான வல்லமையைக் கொண்டது.
மனித மனதின் உள்ளுறை ஆழத்தை ஊடுருவிப் பார்த்து அதன் கலைச் சிந்தனையை மிகத் திறமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவரான கொரலேன்கோ, இந்த நாவலில் பிறப்பிலேயே பார்வையில்லாத ஒருவனை – பியோத்தர் – கதைநாயகனாகக் கொண்டு உண்மையான அகத்தின் வழி உலகைப் பார்த்திருக்கிறார்.
பிறந்த குழந்தையின் குறைபாடு தெரியும்போதும் அதன் வளர்ப்பிலும், அவனே இளைஞனான நிலையிலும் தாயின் மனநிலை மிக அற்புதமாக வெளிப்படுத்தப்படுகிறது. பியோத்தருக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடாத வகையில் வளர்த்தெடுக்க அவரின் குடும்பத்தினரும், மாமா மக்சீமும் மேற்கொள்ளும் முயற்சிகள், ஒலியின் வழி, ஒளியை அறிமுகப்படுத்தும் அன்னை ஆன்னா மிகையிலொவ்னாவின் செயற்பாடுகள் அற்புதமானவை.
பக்கத்து வீட்டுச் சிறுமியாகப் பார்வையற்ற சிறுவனுக்கு அறிமுகமாகி, காதல் உணர்ந்து இளைஞன் – இசைஞன் பியோத்தரின் வாழ்வில் இடம்பெறும் இவெலீனாவின் உறவும் பாத்திரமும் மிகச் சிறப்பாக உருப்பெற்றிருக்கிறது. ஒவ்வொரு பாத்திரமும் முக்கியத்துவத்தைத் தாங்கி நிற்கின்றன.
லேவ் தல்ஸ்தோயின் சமகாலத்தவரான கொரலேன்கோ, இருநூறுக்கும் அதிகமான கதைகளுடன் கட்டுரைகள், விமர்சனங்கள், கடிதங்கள், தன் வரலாறு என ஏராளமாக எழுதியிருக்கிறார். வெளிவந்து 136 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் மீண்டும் மீண்டும் வாசிக்கப்படுகின்ற, பல மொழிகளிலும் பதிப்பிக்கப்படுகின்ற நாவல் இது. விளாதீமிர் கொரலேன்கோவின் புகழ்பெற்ற பிற எழுத்துகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் வாசகர்களுக்கு மேலும் புதிய உலகங்கள் அறிமுகமாகலாம்.
நன்றி: தினமணி, 9/5/22
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%9e%e0%ae%a9%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818