ஆநந்த மடம்
ஆநந்த மடம், பங்கிம் சந்திர சட்டோபாத்யாயர், தமிழில்: மஹேச குமார சர்மா, ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், பக்.336, விலை ரூ.120.
கி.பி.1771 இல் வங்காளத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. கிராமப்புறங்களில் வாழும் மக்களில் பலர் பசியால், நோயால் மாண்டுவிடுகின்றனர். அந்நிலையிலும் அப்பகுதியை ஆண்ட மன்னர் கடுமையாக வரி விதிக்கிறார்.
வரி வசூலிக்கும் பணியை ஆங்கிலேயர் மேற்கொள்கின்றனர். காட்டில் மறைந்து வாழ்ந்த சந்நியாசிகள் ஆட்சி செய்த மன்னரையும், வரி வசூலிக்கும் ஆங்கிலேரையும் எதிர்த்து போரிடுகிறார்கள். வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். எனினும் ஆட்சியாளர்களால் இறுதியில் அவர்கள் வீழ்த்தப்படுகிறார்கள். ஆநந்த மடம் நாவலின் உள்ளடக்கம் இதுதான்.
இந்நாவலை எழுதிய பங்கிம் சந்திரர் உயர்கல்வி கற்று ஆங்கிலேய அரசுப் பணி செய்தவர். அவர் நடத்திய ‘வங்க தர்சன்’ என்ற இதழில் இந்நாவல் தொடராக வெளிவந்திருக்கிறது. 1882 இல் முதன்முதலாக இந்நாவல் வெளியிடப்பட்டிருக்கிறது, அதாவது சந்நியாசிகளின் போராட்டம் நடந்து 110 ஆண்டுகளுக்குப் பிறகு. ஆங்கிலேயரை எதிர்த்த சுதந்திர உணர்வுகள் நெருப்பு மலர்களாக முகிழ்த்த நேரத்தில் இந்நாவல் வெளியிடப்பட்டிருக்கிறது.
வந்தே மாதரம் பாடல் இந்நாவலில் இடம் பெற்றிருக்கிறது. ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்துக்கும் இந்நாவல் உத்வேகமூட்டியிருக்கிறது.
முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்த மஹேச குமார சர்மாவின் மொழிபெயர்ப்பே இந்நூல். சந்நியாசிக் கலகத்தைப் பற்றிய இரண்டு பின் இணைப்புகள், பாரதியார், ஜி.சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் இந்நாவலைப் பற்றி கூறிய கருத்துகள் இடம் பெற்றிருப்பது சிறப்பு.
கொடுமையான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் எல்லாக் காலங்களிலும் இந்நாவல் உத்வேகம் ஊட்டும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினமணி, 18/12/2017.