மனித யந்திரம்

மனித யந்திரம், சின்னப்ப பாரதி, கோரல், பக். 119, விலை ரூ.100.

சமூகத்தின் விளிம்புகளில் வாழ்ந்து வருவோர் குறித்து தொடர்ந்து எழுதி பரவலான வரவேற்பைப் பெற்ற எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதியின் பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.

ஊரில் எல்லாருடைய இழுப்புக்கும் இசைந்து கொடுக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளி வீரன் முதல், வாழ்க்கைப்பட்ட வீட்டில் அனைவருக்கும் இசைந்து கொடுக்கும் இல்லத்தரசி, ஒரு காவல் நிலையத்தையே தனது இல்லமாக்கிக் கொண்டு அங்கு நடைபெறும் அநீதிகளின் ஏக நேரடி சாட்சியான போதிலும், அந்த அநீதிகளுக்கு இசைந்து கொடுக்காத ராஜு வரை, பல கதாபாத்திரங்களை அருமையாகவும் தத்ரூபமாகவும் படைத்திருக்கிறார் சின்னப்பபாரதி.

வயிற்றுப் பிழைப்புக்காக இன்று அலுவலகங்களில் பணியாற்றுவோர் படும் அல்லல்களைச் சொல்லி அலுத்துக் கொள்ளும் ஆண்கள் உண்டு. ஆனால் எந்தக் கூலியும், ஊதியமும் இன்றி, நன்றியும்கூட தெரிவிக்கப்படாமல் குடும்பத்துக்காக உழைத்துத் தேயும் பெண்களுக்கு தமிழ் மொழியின் கெளரவமான பதவிப் பெயர்தான் இல்லத்தரசி. அந்த அரசியின் அல்லல்களைச் சொல்வதுதான் மனித யந்திரம் கதை.

குடும்பத்தையே மறந்து, காவல்நிலையத்தை தனது இல்லமாக்கிக் கொண்டுவிட்டவனின் அடக்கி வைக்கப்பட்ட ஊமைக்கோபங்கள், ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு ஒரு நாள் பீறிட்டு வெளியாகும் கதையைக் கூறுகிறது காவல் நிலையம்.

சின்னப்ப பாரதி தனது கதாபாத்திரங்களை விவரிக்கும் நடை அலாதியானது. இன்றைய சமூகத்தில் காணும் அநீதிகளையும் நாம் அன்றாடம் காணும் எளியவர்களின் துயரங்களையும் உரத்த குரலில் எடுத்துரைக்கும் படைப்புகள்.

நன்றி: தினமணி, 19/2/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *