திருமந்திரத் தமிழ் அமுதம் இரண்டாம் தந்திரம் ஓர் அறிமுகம்

திருமந்திரத் தமிழ் அமுதம் இரண்டாம் தந்திரம் ஓர் அறிமுகம்,  கீழப்பாவூர் ஆ.சண்முகையா, ராஜ கோகிலா அறக்கட்டளை, பக். 150, விலை ரூ.100.

திருமூலர் அருளிய திருமந்திரம் சிவபெருமானைப் போற்றிப்பாடும் வகையில் தோத்திர நூலாகவும், சைவ சித்தாந்தங்களைக் கூறுவதில் சாத்திர நூலாகவும், யோகங்களை விரித்துரைப்பதில் யோக நூலாகவும் திகழ்கிறது. ஏழு தந்திரங்களைக் கொண்ட இந்நூலின் இரண்டாம் தந்திரம் பற்றிய பாடல்களுக்கு வெறும் விளக்கம் மட்டும் தராமல், சங்க இலக்கியங்கள், பன்னிரு திருமுறைகள், திருக்குறள் முதலியவற்றோடு ஒப்பிட்டுக் கூறி, சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள் உண்மைகளை விரித்துரைக்கிறது.

ஒடுக்கம் பற்றிக் கூறுகையில், ஊழிக்காலத்தில் வரும் பிரளயம், மகாப்பிரளயம், இடைப்பிரளயம், தினப்பிரளயம் என்று 423, 425, 426 ஆகிய மூன்று திருமந்திரப் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கப்பட்டுள்ளது.

சகலர், பிரளயகலர், விஞ்ஞானகலர் ஆகிய மூன்று வகையான ஜீவான்மாக்களின் இயல்புகள்; இறைவன் ஒரு குயவன். அவன் மாயை என்னும் களிமண்ணால் மிக விருப்பத்துடன் இந்த உலகைப் படைக்கிறான். அவன் அண்டவெளியில் ஒளிச் சுடராய் விளங்குகிறான்; இறைவன் உயிர்களை ஒன்றாயும், வேறாயும், உடனாயும் இருந்து காக்கிறான் என்றும்; தாயின் வயிற்றில் கரு உருவாதல், கருச்சிதைவு ஏற்படுவதன் காரணம், இரட்டைக் குழந்தைகள், ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதன் காரணம் போன்றவற்றையும்; மறைத்தல் எனப்படும் திரோதான சத்தியின் இயல்பு; பிரணவ மந்திரத்தின் சிறப்பு, செவி, குவி, அவி மந்திரங்களின் தன்மை; 24 வகையான ஆன்ம தத்துவங்கள்; குருநிந்தை, சிவநிந்தை செய்வதால் வரும் பாவங்கள் முதலியன விளக்கம் பெறுகின்றன.

மேலும், இரண்டாம் தந்திரம் கூறும் இறைவன் முப்புரம் எரித்தது, ஆனைத்தோல் போர்த்தியது, சலந்தரனின் அகந்தையை அழித்தது, தக்கன் தலையறுத்தது, மார்க்கண்டேயனுக்கு அருளியது முதலிய புராணக் கதைகளும் இதில் அடங்கும்.

சைவ சித்தாந்த சாத்திரங்களுக்கு அடிப்படையே திருமந்திரம்தான் என்று கூறும் நூலாசிரியர்,இதிலுள்ள 15 கட்டுரைகளின் மூலம் அதை நிரூபித்திருக்கிறார்.

நன்றி: தினமணி, 21/5/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *