பாவை சந்திரனின் நல்ல நிலம் விமர்சனம்
பாவை சந்திரனின் நல்ல நிலம் விமர்சனம், கார்த்திகா வாசுதேவன்,
இந்த நாவலில் பல ஆண்கள் இருக்கிறார்கள், ஆனால், ஆளுமைத் திறன் மிக்கவர்களாகக் காட்டப்படுவது முற்று முழுதாக பெண்கள் மட்டுமே! ஆம், நல்ல நிலத்தை பெண்களே தம் இஷ்டப்படி அவரவர் இயல்புக்கு ஏற்ற வகையில் ஆள்கிறார்கள். அவர்களில் காமு நாயகி என்ற போதும் பிற கதாபாத்திரங்களையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அவரவர் கோணத்தில், அவரவர் நியாயங்களுடன் நாவலுக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றனர்/
கீழைத்தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்துப் பெண் காமாட்சி, அவளுக்கு வரன் தேடி அலைகிறார்கள் பெற்றோரும், உற்றாரும். பல வரன்கள் தட்டிப் போக கடைசியில் மனசுக்குத் திருப்தியாக அதே வட்டாரத்தில் கடலோரக் கிராமமொன்றின் வரன் அமைகிறது.
வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாக அமைந்த அந்த வரனும் இரண்டாம் தாரமாக அமைந்து விடவே காமாட்சி அலைஸ் காமுவின் பெற்றோர் திக்கித்துப் போகிறார்கள். ஆனால், என்ன காரணத்தாலோ அவர்களால் அந்த வரனைப் புறக்கணிக்க முடியவில்லை. அப்படித்தான் சுப்புணி என்கிற சுப்ரமண்யம், காமுவின் கணவனாகிறான். காமுவுக்கு, சுப்புணியை பிடித்துப் போக நாவலில் அனேக காரணங்கள் இருந்த போதும் மனைக்கட்டையில் அமர்ந்து அவன் கரம் பற்றும் முன்பே பெண்ணழைப்பின் போது கண்ட துர்கனாவொன்றின் தாக்கம் மனதோடு தங்கி விட… அவளால் நாவல் முழுதுமே சுப்புணியை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவனாக கருதவே முடியவில்லை. சுப்புணியின் ராசி அப்படிப்பட்டது. அவன் ப்ரியம் வைக்கும் எவரையும் அவனால் கடைசி வரை கண்கலங்காமல் காப்பாற்றவே முடிந்ததில்லை என்றாகிப் போகிறது.
முதல் மனைவி அபயாம்பிகை பிள்ளப்பேற்றில் இறந்து விட, அவளுக்குப் பிறந்த பிள்ளை தொட்டிலில் சிணுங்கிக் கொண்டிருக்கும் போதே காமுவுடன் மனையில் அமர்ந்து கல்யாணக் கோலம் கொள்கிறான் சுப்புணி. பிள்ளைக்காகத் தான் கல்யாணம் என்று தொடங்கினாலும் அது மேலுமிரு பிள்ளைப்பேற்றுடன் இடைவழியில் தடைபட நமச்சிவாயம் காரணமாகிறான்.
நாவலின் இந்த இடத்தில் நாம் சுப்புணியின் குண விஷேசத்தைப் பற்றி சற்று அலசித்தான் ஆக வேண்டும். காமு அழுத்தம் என்றால்… சுப்புணி மகா அழுத்தம். சுப்புணி… அபயத்தின் மரணத்தின் பின் காமுவை மணக்கிறான் இல்லையா? அதனால் அவனுக்கு 2 மனைவிகள் மட்டுமே என்று யாரும் நினைத்து விடத் தேவையில்லை. அபயத்துக்கும், காமுவுக்கும் நடுவில் மீனவப் பெண் மீனாம்பாவுடனான உறவை அவன் எப்படியும் வகைப்படுத்தவில்லை என்பதால் அவளை சுப்புணியின் மனைவி இல்லை என்று கருதி விட முடியாது. ஏனெனில், சாட்சியாக அவர்களிருவருக்கும் ஒரு பிள்ளையும் இருக்கிறான். மேலும் மீனாம்பாள் காரணமாகத்தான் சுப்புணிக்கும், நமச்சிவாயத்துக்கும் கிராமத்தில் பகையே மூள்கிறது.
நமச்சிவாயத்துடன் தகராறு முற்றுவதற்கு முன்பான காலகட்டம் சுப்புணியின் வாழ்வில் சொர்க்கம். அவன், தனது வில்வண்டி பூட்டி புது மனைவியை அழைத்துக்கொண்டு செளரி ராஜப் பெருமாள் திருவிழா காணச் செல்கிறான், தன் அக்கா குடித்தனம் செய்யும் நாகபட்டிணம் செல்கிறான். அவளை கடற்கரைக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறான்.
தங்களது குடும்பத்தின் புரவலர்களாக இருக்கும் பட்டணத்துக் காமாட்சியம்மாள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். முடிந்தவரையில் அவளுக்கொரு அருமையான கணவனாகவே நடந்து கொள்கிறான். எல்லாம் பெயருக்கு மாமனைத் திருமணம் செய்து கொண்டு பட்டணத்துப் பக்கம் கரையொதுங்கிய மீனாம்பா சுப்புணியின் ஊருக்குத் திரும்பி வரும் வரையில் தான்.
ஆரம்பத்தில் சுப்புணிக்கு, மீனாம்பாளுடனான உறவை நமச்சிவாயம் கிண்டல் செய்ய அதன் காரணமாகவே சண்டைகளும், சச்சரவுகளும் துவங்குகின்றன. நடுவில் இரு தரப்புக்கும் இடையிலான நிலத்தகராறும், பண்ணையாட்களுக்கிடையான தகராறும் சேர்ந்து கொள்ள அந்த சச்சரவு வளர்ந்து, வளர்ந்து பின்னொரு நாளில் கிராமத்துத் திருவிழாவில் பெரிய பிரச்னையாக வெடிக்கிறது.
யாருக்கு முதல் மரியாதை என்பதில் நமச்சிவாயம் தரப்புக்கும், சுப்புணி தரப்புக்கும் பிரச்னை வெடிக்க நாளை என்னவாகப் போகிறதோ? என்று திகிலில் கிராமத்தில் பொழுது விடிய கூடவே காமுவின் வாழ்வில் அவளது இல்லறத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் விதத்தில் பிரளயமும் வெடிக்கிறது. காமுவுக்கும், சுப்புணிக்குமாக சந்தானம் பிறந்து நடைபயின்று கொண்டிருக்கும் பருவம் அது. மகனுக்கு சோறூட்டித் தூங்கச் செய்த காமுவுக்கு, கணவனிடத்தில் பகிர ஒரு சேதி இருந்தது.
தலைச்சுற்றலுடன், வாந்தியுமாக பாடாய்ப் பட்டுக் கொண்டிருந்தவள் தான் மீண்டும் கருவுற்றதை கணவனிடம் பகிர நேரம் பார்த்து காத்திருந்தாள். ஆனால், மனைவி கருவுற்றதை அறியாமலே பொழுது விடிகையில் தலைமறைவாகிறான் சுப்புணி. இது பேரிடி என்றால் அடுத்தொரு பேரதிர்ச்சியாக ஊர் எல்லையில் கோரக் கொலையுண்டு கிடக்கிறான் வம்பிழுத்த நமச்சிவாயம்.
தலை வேறு… முண்டம் வேறாக துண்டான சடலம் பிரிட்டிஷ் எல்லைக்கும், டச்சுக்காரர்களது எல்லைக்கும் நடுவில் அந்தப் பக்கம் தலை, இந்தப் பக்கம் முண்டமென விழுந்து கிடக்கிறது. இவ்விடத்தில் கொலை கொடூரமானது தான் என்றாலும் அதை நிகழ்த்த கொலைகாரன் தேர்ந்தெடுத்த இடம் மிகச்சிறந்த நகைமுரண். அதனால் சடலத்தை அப்புறப்படுத்தவே சட்டச்சிக்கல் வந்து விடுகிறது. பிறகு எப்படியோ ஒருவழியாக வழக்கு விசாரணை துவங்குகிறது.
சுப்புணி தலைமறைவானதால் அவன் தான் நமச்சிவாயத்தை கொன்றிருப்பானோ என்று ஒரு பக்கம் விசாரணையை முடுக்கி விடுகிறார் பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி. மற்றொரு பக்கம் சுப்புணியை இந்த வழக்கிலிருந்து எப்படியாவது மீட்டு அவனுக்கும் கொலைக்கும் சம்மந்தமே இல்லை என நிரூபிக்கத் துடிக்கிறார்கள். சுப்புணியின் ஆதரவாளர்களான மாணிக்கம் பிள்ளையும், பஞ்சாங்கக்கார ஐயரும்.
இதற்கு நடுவில் சுப்புணி இல்லாமல் வாழவும், குடும்பத்தை சமாளிக்கவும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்கிறாள் காமு. சுப்புணி இல்லாத காமுவின் வாழ்வில் இடைப்படும் ஒவ்வொரு நாளுமே அவளுக்கு ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தருகிறது. சுப்புணிக்கு, நமச்சிவாயம் கொலையில் சம்மந்தமிருப்பதை ஆதாரத்துடன் ஊர்ஜிதப்படுத்த வேண்டிய கடமை காவல் அதிகாரிக்கு இருப்பதால், அவர் ஊரார் யாரும் சுப்புணி குடும்பத்துடன் அன்னந்தண்ணி புழங்கக் கூடாது என ஆணையிடுகிறார். மீறினால் தண்டிக்கப்படும் பயம் இருந்ததால் ஊரில் பெரும்பாலானோர் காமுவுடன் பேசவும் பயந்தனர்.
அச்சூழ்நிலையில் காமுவுக்கு ஆறுதலாக இருந்தவர்கள் ஒரு சிலரே! அவர்களில் மாணிக்கம் பிள்ளை காமுவுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து ஆரம்பம் முதல் இறுதி வரை உதவக்கூடியவராக் இருந்தார். பஞ்சாங்கக்கார ஐயரும் அவரது மனைவியும் கூட காமுவுக்கு அவர்களால் ஆன ஆறுதலைத் தர எப்போதும் தயாராக இருந்தார்கள். இவர்களைத் தவிர அய்யாக்கண்ணு குடும்பத்தின் சேவையைப் பற்றிப் பேச நாளெல்லாம் போதாது.
அந்தக் குடும்பம் சுப்புணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குத் திரும்பி வருவரையிலும் கூட காமுவுடன் தான் ஒத்தாசையாக இருந்தது. தகப்பன் வீட்டார் இருந்தும் கூட, திருமணமான பெண் புக்ககத்தை விட்டு வாழாவெட்டியாக பிறந்தகம் செல்வது தனக்கு மட்டுமல்ல தன் பெற்றோருக்கும் இழுக்கு எனக் கருதிய காமு, கணவன் இல்லாத வீட்டில் தானே அனைத்துமாக இருந்து அவனது சொத்துக்களைப் பரிபாலனம் செய்யத் தைரியம் பெற்றது மேற்கண்ட உபகாரிகளின் பலத்தில் தான்.
சுப்புணி ஊரை விட்டுச் சென்றதும் சென்றான்… ஊர் கணக்குப் பிள்ளைக்கு துளிர் விட்டுப் போச்சு கணக்காக அதுவரையிலும் ஓரளவுக்கு அடக்கி வாசித்துக் கொண்டிருந்த கணக்குப் பிள்ளை, தனது அதிகாரத்தின் பலத்தில் ஊர் பெண்டுகளை எல்லாம் ஆளத் துடிக்கிறான். அதிலும் கணவன் துணையற்று தனித்திருக்கும் பெண்கள் என்றால் அவனுக்கு அத்தனையும் தனதுரிமை என்ற எகத்தாளம். அப்படி எண்ணிக்கொண்டு தான் அவன் ஊருக்குப் புதிதாக குடித்தனம் வரும் மளிகைப்பொருள் வியாபாரி சாத்தூரானின் மனைவி சீத்தம்மாவில் தொடங்கி காமுவின் பக்கத்து வீட்டுக்காரி அம்மாக்கண்ணு வரை சரஸமாடத் தொடங்குகிறான்.
எங்கே சுப்புணி ஊருக்குத் திரும்பி வந்தால் தனது அதிகாரத்துக்கு பங்கம் வருமோ என்று பயந்த கணக்குப் பிள்ளை சுப்புணி திரும்பி வந்து விடக்கூடாது என்று எதிர்பார்க்கும் கூட்டத்தில் ஒருவனாகிப் போகிறான். நாவலைப்பொறுத்தவரை வில்லனென்றால் அது நமச்சிவாயமும், இந்தக் கணக்குப் பிள்ளையும் தான்.
இதன் நடுவே சுப்புணியின் அக்கா லட்சுமியிடம் வளர்ந்து வரும் அவனது மூத்த மகன் வேலு, அத்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டே வெளியேறுமாறு ஒரு சம்பவம் நேர்ந்து விடுகிறது. காரணம் காமுவின் ஸ்னேகிதி அம்புஜம். கணவனை இழந்த அம்புஜத்துக்கு ஒத்தாசையாக இருக்கட்டும் என தன் அண்ணியிடம் கோரி ஒரு கிளப்புக் கடை வைத்துப் பிழைக்க சகாயம் செய்கிறாள் காமு. அம்புஜத்தின் கடை அதன் சுவைக்காக பிரபலமாகி அவளது வாழ்க்கைப் பாட்டிற்கு உதவுகிறது.
வேலு அம்புஜத்தின் கடைக்குச் சென்று அவ்வப்போது ஏதாவது சாப்பிடுவதுண்டு. அத்தையிடம் கோபித்துக் கொண்டு அப்படி ஒரு நாள் அம்புஜத்தின் கடைக்குச் சென்று காத்திருந்தவனை… அவள் குளிக்கும் போது ஒளிந்திருந்து பார்க்கிறானோ என்று அவனைத் தேடிக் கொண்டு அவ்விடம் வந்த அத்தை லட்சுமியே சந்தேகப்பட்டு விட அன்று ஊரை விட்டு ஓடியவன் தான் வேலு பிறகு எவர் தயவிலோ கப்பலேறி ரங்கூனுக்குப் போகிறவன் அங்கே போர் முற்றிய நிலையில் அகதியாக கால்நடையாகவே இந்தியாவுக்கு தப்பி வர வேண்டியவனாகி விடுகிறான்.
நாவலை விமர்சனம் செய்கிறேன் என்று மொத்தக் கதையையும் சொல்லத் தொடங்கி விட்டேன் என்று நினைக்கிறேன்.
நன்றி: தினமணி,23/7/2018
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818