பேதமறுத்த பிராமணன்
பேதமறுத்த பிராமணன், ஆச்சாரியர் பிரம்மதர்மதாசன்(எழிலரசு), வேங்கடாசலம் பிள்ளை நினைவு வெளியீடு, பக்.360, விலை ரூ.200.
இந்திய வரலாற்றில் மேற்கு வங்க மாநிலம் பல மகத்தான மனிதர்களை உருவாக்கியிருக்கிறது. சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், விவேகானந்தர், பக்கிம் சந்திரர் என்ற அந்த வரிசையில் மற்றுமொரு மகத்தான மனிதர் ராஜா ராம்மோகன் ராய்.
அவரது வாழ்க்கை வரலாற்றை முப்பத்தைந்து அத்தியாயங்களில் முழுமையாகப் பதிவு செய்கிறது இந்நூல். ராஜா ராம்மோகன் ராய் ஸதி எனப்படும் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க பாடுபட்டவர் என்பது உலகமறிந்ததுதான். ஆனால் அவரது சாதனை அது மட்டுமன்று.
வேதங்களையும் உபநிடதங்களையும் கற்றுத்தேர்ந்த இவர், அவற்றை எல்லா வகுப்பினரும் கற்குமாறு கல்விக் கூடத்தை நிறுவினார்.
வேதங்களைத் தனது தாய்மொழியான வங்க மொழியில் மொழிபெயர்த்தார். பெண்களின் கல்வி கற்கும் உரிமைக்காக குரல் கொடுத்ததோடு பெண்களுக்கான திருமண வயது, திருமண சுதந்திரம், சொத்துரிமை போன்றவற்றையும் வரையறை செய்தார்.
வங்க மொழிக்கு முறைப்படுத்தப்பட்ட ஓர் இலக்கண நூலை உருவாக்கினார்.சமூகப் பூசல்களுக்கு அடிப்படைக் காரணம், சாதிகளின் ஏற்றத்தாழ்வே என்பதை உணர்ந்து சாதி ஒழிப்புக்கு அரும்பாடுபட்டார்.
ராம்மோகன் ராய் புராணங்களையும் இதிகாசங்களையும் ஏற்கவில்லை. பல தெய்வ வழிபாட்டை மறுக்கிறார்.
உண்மையான ஆன்மிக நெறியை நிலைநாட்ட ஆத்மிய சபா ஒன்றை உருவாக்கினார். இதுவே பின்னாளில் பிரம்ம சமாஜம் என்று ஆயிற்று.
இவருடைய பல சிந்தனைகள் திருமூலர் (உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்), திருவள்ளுவர் (இறைவன் எண்குணத்தான்), மணிவாசகர் (ஒருநாமம் ஓருருவம் இல்லாத இறைவர்க்கு ஆயிரம் திருநாமம்) போன்ற தமிழ்நாட்டு அருளாளர்களோடு ஒத்திருப்பது வியப்பளிக்கிறது.
ஒரு சமூக சீர்திருத்தப் போராளியின் உண்மை வரலாற்றை அறிய உதவும் நூல்.
நன்றி: தினமணி, 8/10/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818