ருஷ்யப் புரட்சியும் இந்தியாவும்
ருஷ்யப் புரட்சியும் இந்தியாவும், தொகுப்பாசிரியர்: இளசை மணியன், வேலா வெளியீட்டகம்,பக்.128, விலை ரூ.100.
மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தாளங்கே ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி என்று பாரதியார் பாடிய ருஷ்யப் புரட்சிக்கும் இந்தியாவுக்கும் உள்ள பல்வேறு தொடர்புகளை விளக்கும்விதமாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சோவியத் நாடு, இஸ்கஸ், குடியரசு, ஜனசக்தி- நவம்பர் புரட்சி மலர் ஆகியவற்றில் இந்த கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
பாலதண்டாயுதம், ஆர். நல்லகண்ணு, சி.எஸ்.சுப்ரமணியம், நெ.து.சுந்தரவடிவேலு, தொ.மு.சி.ரகுநாதன் மற்றும் பல ருஷ்ய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாயை பெரிதும் நேசித்தவர் காந்தி என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் 1905 ஆம் ஆண்டு நடந்த ரஷ்யப் புரட்சியைப் பற்றி காந்தி, ரஷ்ய மக்கள் வெற்றி பெறுவார்களேயானால், ரஷ்யாவில் நடைபெறும் இந்தப் புரட்சி இன்றைய சகாப்தத்தின் மிகப் பெரும் வெற்றியாக, மிகப்பெரும் சாதனையாகக் கருதப்படும் எனஎழுதியிருக்கிறார்.
1908 – இல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் திலகரைக் கைது செய்ததை எதிர்த்து பம்பாய் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது குறித்து லெனின் எழுதியிருக்கிறார். இவ்வாறு இருநாடுகளுக்கும் இடையிலான பல்வேறு அரசியல், கலாசார உறவுகள் பற்றியும், ரஷ்ய புரட்சி இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலும், அதற்குப் பின்பும் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும், தமிழிலக்கியத்தில் ரஷ்யப் புரட்சியின் தாக்கம் பற்றியும் எழுதப்பட்டுள்ள பல கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சிறந்த பதிவு.
நன்றி: தினணி, 24/12/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818