தொல்காப்பியம் சங்க இலக்கியம்
தொல்காப்பியம் சங்க இலக்கியம், உரைமேற்கோள் உரைகள், சோ.ராஜலட்சுமி; காவ்யா, பக்.280. விலை ரூ.280.
பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் சுவடிகளிலிருந்து பதிப்பிக்கப்பட்டன. அவ்வாறு பதிப்பிக்கப்பட்ட நூல்களை நாம் புரிந்து கொள்வதற்கு உதவுபவர்கள் உரையாசிரியர்கள். அவ்வாறு உரை எழுதுபவர்கள், உரையை விளக்கத்துக்காக பிற நூல்களை எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார்கள். அவ்வாறு எடுத்துக்காட்டும் நூல்களில் உள்ள சில பகுதிகளுக்கு உரையும் சொல்லியிருக்கிறார்கள். அவற்றைத் தொகுத்து இந்நூல் ஆராய்ந்திருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட இலக்கியம் ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறு மாறுபட்டு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் இந்நூல் விளக்குகிறது.
இந்நூல் தமிழ்ப் புலமை மரபும் உரையாசிரியர்களும் இளம்பூரணர் உரை, நச்சினார்க்கினியர் உரை,பேராசிரியர் உரை பிற உரையாசிரியர்களின் உரை,சங்க இலக்கிய உரை என ஆறுபகுதிகளாக அமைந்துள்ளது.
உரையினால் அவ்வுரையாசிரியருடைய கல்விப் பரப்பும், நூலாசிரியருடைய உண்மைக் கருத்துகளும், பல ஆசிரியர் பெயர்களும், இக்காலத்து வழங்காத அரிய விஷயங்களும், பல நூற்பெயர்களும், அக்காலத்து வழங்கிய சொற் பிரயோகங்களும், இவைபோல்வன பிறவும் விளங்கும் என்று தக்கயாகப்பரணி நூலின் முகவுரையில் உ.வே.சாமிநாதையர் கூறியிருக்கிறார். இந்நூல் அந்த அடிப்படையில் பழந்தமிழ் நூல்களின் உரையாசிரியர்களான இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையார், பரிமேலழகர், மணக்குடவர், பதுமனார், இறையனார், ணசாகரர் உள்ளிட்ட பலர் எவ்வாறு உரை எழுதியிருக்கிறார்கள், விளக்கியிருக்கிறார்கள் என்பதை ஆராய்கிறது. பழந்தமிழ் நூல்களைப் பயிலும் மாணவர்களுக்கும், பழந்தமிழிலக்கியங்களில் ஆர்வம் உடையவர்களுக்கும் பயன்படும் சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 1/4/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818