வியப்பூட்டும் வழிபாடுகள்

வியப்பூட்டும் வழிபாடுகள்,  பெ.பெரியார்மன்னன், விவேகா பதிப்பகம், பக்.118, விலை ரூ.145.

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பல்வேறுவிதமான வழிபடும் முறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய அறிமுகமாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.

ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் அமைந்துள்ள பழனியாபுரம் கிராம எல்லை வனப்பகுதியில் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே வழிபடுகிறார்கள். இரவு நேரத்தில் காவல்தெய்வமான “முனி’ உலாவுவதால் இக்கோவிலுக்குப் பெண்கள் செல்வதில்லை.

குமாரபாளையம் கிராமத்தின் நுழைவு வாயிலில் வெள்ளாற்றின் வலது கரையில் அமைந்துள்ளது “சாராய’ முனியப்பன் கோவில். முனியப்ப சுவாமிக்கு சாராயத்தைத் தெளித்து அபிஷேகம் செய்கிறார்கள். பாட்டிலோடு சாராயத்தைப் படையல் வைத்தும் வழிபடுகின்றனர்.

வாழப்பாடியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள நாவல்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு எங்கிருந்தோ வந்த துறவி ஒருவர் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு மூலிகை மருத்துவம் செய்திருக்கிறார். ஆன்மிகக் கருத்துகளையும் பேசியிருக்கிறார். அவருக்குக் கோவில் கட்டிய கிராம மக்கள் ஒவ்வோராண்டும் பொங்கல் அன்று கால்நடைகளுடன் அங்கு சென்று துறவி அமைத்த ஆன்மிகக் கல்வெட்டுக்கு வழிபாடு நடத்துகின்றனர்.

வாழப்பாடியை அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தில் உள்ள புலிக்குத்திப்பட்டான் வீரக்கல் கல்வெட்டுக்கு மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

புத்திரகவுண்டன் பாளையத்தில் உள்ள உலகிலேயே உயரமான 146 அடி உயர முருகன் சிலை, 65 அடி உயரத்தில் உள்ள இயேசுவின் சிலை, கண்ணுக்கானூர் கிராமத்தில் அமைந்துள்ள தெருக்களின் மையப்பகுதியில் அமைந்துள்ள குடிசைக் கோயில்கள், அக்ரஹார நாட்டாமங்கலம் வெளவால் தோப்பு கிராமத்தில் நடைபெறும் வெளவால் வழிபாடு என பலரும் அறியாத அரிய தகவல்கள் இந்நூல் முழுவதும் நிறைந்திருக்கின்றன.

நன்றி: தினமணி, 1/11/21.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *