அன்பின் வழியது உயிர்
அன்பின் வழியது உயிர் (லியோ டால்ஸ்டாய் சிறுகதைகள்), ஜெ.நிர்மலா, மாசிலாள் பதிப்பகம், பக்.116, விலை ரூ.150.
ரஷிய இலக்கியத்தின் மாபெரும் ஆளுமையான லியோ டால்ஸ்டாயின் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.
நுகர்வுக் கலாசாரத்தில் மறந்துபோன, மரத்துப்போன மனித நேய மதிப்பீடுகளை மறுபதிவு செய்ய வேண்டும் என்ற நூலாசிரியரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் விதமாக கதைத் தேர்வுகள் அமைந்துள்ளன.
நன்னயம் செய்துவிடல்’ என்ற கதையில், செய்யாத கொலைக்கு இவான்அக்செனோவ் என்பவன் தண்டிக்கப்பட்டு சைபீரியச் சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கு, உண்மையான குற்றவாளி மக்கர் செமனீச் என்பவனை காண நேர்கிறது. அவனை காட்டிக்கொடுக்க இவானுக்கு சந்தர்ப்பம் வாய்க்கிறது. ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. மனச்சாட்சி உறுத்தியதன் காரணமாக தானே முன்வந்து மக்கர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்கிறான்.
‘பிறிதின் நோய், தன் நோய்போல்’ என்னும் சிறுகதையில் செருப்பு தைக்கும் முதியவர் மார்ட்டின், ரஷியாவின் கொடும் பனியில் வாடிக்கொண்டிருந்த இருவரை தன் வீட்டுக்கு அழைத்து வந்து தேநீர் தந்து உபசரிக்கிறார். இயேசு தன்னைத் தேடி வந்ததாகவும், தான் இயேசுவை உபசரித்ததாகவும் எண்ணி மனம் நிறைவடைகிறார்.
‘ஏனைய இரு சிறுகதைகளான’ நோற்பாரின் நோன்மையுடைத்து, ‘அன்பின் வழியது உயிர்’ ஆகியவற்றின் விவரிப்புகளும், எஃபிம், எலிஷா, சிமோன், மிகயேல் ஆகிய கதை மாந்தர்கள் ஏற்படுத்தும் உணர்வுகள் ரஷியாவின் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்வியலை முன்னிறுத்துகின்றன.
இந்நூலிலுள்ள நான்கு சிறுகதைகளின் தலைப்புகள் அவை வலியுறுத்தும் அறநெறிகளுக்கு ஏற்ப திருக்குறளில் இருந்து கையாளப்பட்டிருப்பதும், ரஷிய கதைகளை மொழிபெயர்ப்பு என்கிற எல்லைக்குள் சுருக்கிவிடாமல் மொழியாக்கம் என்கிற அளவில் விவரித்திருப்பதும் இதன் சிறப்பு.
நன்றி: தினமணி, 4/4/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818