அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும்

அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும், நீதிநாயகம் து.அரிபரந்தாமன், நீதிபதி சிவராஜ் வி.பாட்டில் அறக்கட்டளை, பக். 88, விலைரூ.75.

‘அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும் 39’ – இந்நூலின் முதல் கட்டுரை. இது தவிர இன்னும் ஏழு கட்டுரைகள் உள்ளன. சென்னை ஐ.ஐ.டி.யில் நூலாசிரியர் ஆற்றிய உரை, அவர் நீதிபதியாகப் பதவியேற்றபோது ஆற்றிய உரை, பணிநிறைவு பெற்ற போது ஆற்றிய உரை, ‘பொதுபள்ளிக்கான மாநில மேடை 39’ அமைப்பு நீட் பற்றி வெளியிட்ட துண்டறிக்கை, ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ரத்து செய்யக் கோரி நடந்த கருத்தரங்கில் ஆற்றிய உரை, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து நூலாசிரியரின் முகநூல் பதிவு என இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

‘மதச்சார்பின்மையின் மையமான விதி என்பது அரசையும் மதத்தையும் பிரித்து வைப்பதே ஆகும். அரசின் நிர்வாக விஷயங்களில் மதத்துக்கு எவ்விதமான இடமும் இருப்பதில்லை 39’ என்று மதச்சார்பின்மையை வரையறுக்கும் நூலாசிரியர், இந்தியாவில் மதச்சார்பின்மைக் கோட்பாடு எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகிறது என்பதை விளக்குகிறார்.

அரசியல் அமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை உறுதி செய்வதை எடுத்துக்காட்டும் நூலாசிரியர், பல்வேறு வழக்குகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில், நீதிமன்றம் மதச்சார்பின்மையை உறுதிப்படுத்திய நிகழ்வுகளையும், அதில் பின்னடைவு ஏற்பட்ட நிகழ்வுகளையும் விவரித்திருக்கிறார்.

கேரளத்தில் உள்ள அமைதிப் பள்ளதாக்கு காட்டுப் பகுதியில் நீர் மின்நிலையம் அமைப்பதால் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் அங்குள்ள மக்கள் போராடி, அந்தப் பகுதியைக் காப்பாற்றியதைப் போல தமிழ்நாட்டிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்கள் இயக்கங்கள் வேண்டும் என்கிறார்.

ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்காவிட்டால், ஒரு காலத்தில் நிரந்தரத் தொழிலாளர்களே இல்லாமல் போய்விடுவார்கள் என்று ஒரு கட்டுரை எச்சரிக்கிறது.

நூலாசிரியரின் எளிமை, உயர்ந்த பண்புகளை அவர் நீதிபதி பதவியேற்றபோதும், பணி நிறைவு பெற்றபோதும் ஆற்றிய உரைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பிடத்தக்க நூல்.

நன்றி: தினமணி, 30/10/2017.

Leave a Reply

Your email address will not be published.