ஸ்ரீஅகத்திய பகவான் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் விரிவுரை

ஸ்ரீஅகத்திய பகவான் அருளிய ஆதித்ய ஹ்ருதயம் விரிவுரை, சு.அரங்கநாதன், ஸ்ரீ அரங்கன் நிலையம், பக்.496, விலை ரூ.400.

வான்மீகத்தில், இராம – இராவண யுத்தத்தின்போது, போரின் நிலையைக் காண வருகின்றார் மாமுனிவர் அகத்தியர். போரினால் சோர்வும் துயரமும் கொண்டிருக்கும் இராமனுக்கு அவர் உபதேசித்த வெற்றி மந்திரம்தான் “ஆதித்ய ஹ்ருதயம்”.

சூரியதேவனின் பலத்தையும் ஆற்றலையும் பெற்றுத் தரும் இந்த மந்திரத்தை நாளும் மும்முறை ஓதினால், வெற்றி உறுதி என்று அருளிச் செய்கிறார் அகத்திய முனிவர். சிதம்பரத்தில் தமிழாசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர் சு. அரங்கநாதன். விபத்தில் கேட்கும் திறனை இழந்த நிலையிலும், தொடர்ந்து தமிழ்ப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். தனது 76-ஆவது வயதில் அகத்தியரின் ஆதித்ய ஹ்ருதயத்துக்குத் தமிழில் உரை எழுதும் முயற்சியில் இறங்கினார். அவரது நான்காண்டு கடின உழைப்பின் விளைவாக உருவானதுதான் இந்த நூல்.

இந்த நூல் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இறைவனடி சேர்ந்தார். அவரது மகன் முனைவர் வெற்றிச்செல்வன் தனது தந்தையின் கனவை நனவாக்கி இருக்கிறார். உலக மக்கள் அனைவரும் சூரிய புத்திரர்கள் என்றும், மக்கள் குலமனைத்தும் அக்கினிக் கோத்திரத்தவர்கள் என்றும் நிறுவ முற்படுகிறார் ஆசிரியர். மறைமொழியே மந்திரம் என்று கூறப்படுகிறது.

மந்திரத்தில் உயர்ந்த மந்திரமாகக் கருதப்படுவது, சத்திரிய குலத்தோன்றல் விசுவாமித்திரனின் சூரிய காயத்ரி மந்திரமாகும். அதன் விளக்கமும் இந்த நூலில் கூறப்பட்டுள்ளது. மறைத்தமிழில் கூறப்பட்ட காயத்ரி மந்திரத்தின் விரிவாக்கமே ஆதித்ய ஹ்ருதயம் என்கிறார் நூலாசிரியர்.

தமிழாசிரியரான புலவர் சு. அரங்கநாதனின் பார்வையில், தமிழும், சமஸ்கிருதமும் சொல்லால், பொருளால், இலக்கணத்தால் இணக்கமான இரட்டை மொழிகள். தமிழிலிருந்து, மறைத் தமிழாகப் பிரிந்த மொழி சமஸ்கிருதம் தமிழும், சமஸ்கிருதமும் இணக்கமான மொழிகள் என்பதற்குத் தமிழின் மணிப்பிரவாள நடையே சான்று என்று கூறும் ஆசிரியர், சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழ் என்றும் இந்த நூலில் நிறுவ முற்பட்டிருக்கிறார்.

ஆதித்ய ஹ்ருதயம் என்கிற அகத்திய முனிவர் அருளிய சமஸ்கிருத மந்திரத்தை ஆதித்ய இருதயம் என்று மொழி பெயர்த்துப் பொருளும் கூறி விளக்கும் நூலாசிரியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர், ஒளவையார், பாரதியார் மற்றும் பாரதிதாசன் வரிகளை ஆங்காங்கே எடுத்துக் காட்டி, தனது தமிழ்ப் புலமையையும் நிறுவியிருக்கிறார். ஆன்மிகத்துக்கும் அறிவியலுக்கும் பாலம் போட முயற்சித்திருக்கிறது புலவர் சு. அரங்கநாதனின் விரிவுரை.

நன்றி: தமிழ் இந்து

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *