தருமபுரி முதல் பூடான் வரை

தருமபுரி முதல் பூடான் வரை – வரலாற்றுத் தடங்களின் வழியே ,  இரா.செந்தில்; டிஸ்கவரி புக் பேலஸ், பக்.104; விலை ரூ.120; 

தருமபுரியில் மருத்துவராக உள்ள நூலாசிரியர், பயணங்களின் பயனை அறிந்தவர் மட்டுமல்ல; அதற்கான நெறிமுறைகளையும் அனுபவத்தால் உணர்ந்தவர். தனது பூடான் வரையிலான மகிழுந்துப் பயண அனுபவத்தை நூலாகத் தந்திருக்கிறார்.

தருமபுரியில் தொடங்கி நாட்டின் பல மாநிலங்கள் வழியே காரில் பயணித்து, அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைச்சூழல், விருந்தோம்பல், சரித்திர நிகழ்வுகள் ஆகியவற்றை ஆங்காங்கே பதிவு செய்யும் நூலாசிரியரின் நுட்பம் பாராட்டுக்குரியது. குறிப்பாக, இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய ஆங்கிலேயர்களான சர் தாமஸ் மன்றோ, வில்லியம் லாம்ப்டன், ஜார்ஜ் எவரெஸ்ட், ஸ்காட் வாக், வில்லியம் ஹென்றி ஸ்லீமன், சர் ஆர்தர் காட்டன் போன்றோரின் நினைவிடங்களுக்குச் சென்று, அவர்களை நினைவுகூர்ந்திருப்பது மிகப் பொருத்தம்.

அதேபோல, பூடானில் நிலவும் இதமான தட்பவெப்பம் போலவே, அங்குள்ள மக்களின் எளிய, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் பதிவு செய்திருக்கிறார். ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தை விட (ஜிடிபி) ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மகிழ்ச்சி விகிதம் முக்கியமானது என்ற பூடான் மன்னரின் கருத்தையும் ஆமோதிக்கிறார். ஆரோக்கியத்தைப் பேணுவதே பயணம் மேற்கொள்வோருக்கு அடிப்படை அவசியம் என்பதையும் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி,நறுக்கெனப் புரிய வைக்கிறார்.

நம்முடைய வாகனங்களை ஆண்டுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்வது போல, நமது ஆன்மாவை சர்வீஸ் செய்ய வேண்டும்; அதற்கான சிறந்த வழி பயணங்களே' என்பது நூலாசிரியரின் பரிந்துரை. இந்த நூலைப் படித்து முடிக்கையில் நமது மனதிலும் இதே எண்ணம் தோன்றுவதுதான் சிறப்பு.

நன்றி: தினமணி, 22/3/21

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031246_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.