வ.உ.சி. நூல் திரட்டு
வ.உ.சி. நூல் திரட்டு, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கவிதைகள், தொகுப்பாசிரியர் வீ. அரசு, புலமைப் பித்தன் பதிப்பகம்.
பொருளும் மனமும் குன்றிடினும் யான் குன்றேன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதிய கவிதைகள், அவருடைய உரை ஆகியவற்றை, சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் வீ. அரசு தொகுத்துள்ள வ.உ.சி. நூல் திரட்டு என்ற நூலை படித்தேன். புலமைப் பித்தன் பதிப்பகம், அந்த நூலை வெளியிட்டுள்ளது. பிறப்பு, வளர்ப்பு, வக்கீல் தொழில், சுதந்திர போராட்டம், கப்பல் கம்பெனி நடத்தியது என, வ.உ.சி. எழுதி, பேசிய 13 நூல்களின் திரட்டு இந்த தொகுப்பு. அவரின் கவிதை தொகுப்பு ஒன்றும் அடங்கி உள்ளது. கப்பல் வாங்க, அவர் மும்பை சென்றபோது, மகன் இறந்துவிடுகிறார். மகனின் இறப்புக்கு வ.உ.சி. வரவில்லை. பின்னாளில், கப்பல் கம்பெனியும் நஷ்டமடைகிறத. அப்போது, அவர் எழுதிய கவிதைகளில் என் மனமும் என் உடம்பும் என் சுகமும் என் நிலையும், என் மனையும் என் மகவும், என் பொருளும் என் மனமும் குன்றிடினும் யான் குன்றேன் என மன உறுதியை வெளிப்படுத்துகிறார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்த வ. ராமசுப்ரமணிய ஐயர் என்ற, வ.ரா. போராட்டத்திலிருந்து விலகிய போது, அவருக்கு வ.உ.சி., கடிதம் ஒன்று எழுதுகிறார். அதில் தேசப்பணி முடிந்துவிட்டது என, தூங்க சென்றுவிட்டீர்களா. பெரும் பொருள் ஈட்டிவிட்டோம் என, இன்பம் துய்க்க சென்றுவிட்டீர்களா. எதை செய்திருந்தாலும் அது தவறு. கொழும்பில் இருந்து வெளியாகும் வீரகேசரி நாளிதழுக்கு ஆசிரியர் தேவை. நீங்கள் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார். வ.ராவு.க்கு சம்பளம் முடிவு செய்து, கொழும்புக்கு வ.உ.சி. அனுப்பியுள்ளார். உயர் ஜாதியில் பிறந்திருந்தாலும், ஈ.வெ.ரா.வின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஆதரித்து, காங்கிரஸ் மகாசபை கூட்டத்தில், வ.உ.சி. பேசியுள்ளார். அதேபோல் மதவாதிகளை ஆதரிக்கவில்லை. மெய்கண்ட சிவம் எழுதிய, சிவஞான போதம் நூலுக்கு, பொழிப்புரை எழுதிய பலர், மதங்களை ஆதரித்தார் மெய்கண்டார் என கூறி உள்ளனர். இவற்றை வ.உ.சி. மறுத்துள்ளார். தேச துரோக குற்றச்சாட்டில், இரு ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் இருந்த அவர், ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கிய நூலாசிரியர் நூலை, மனம் போல் வாழ்வு என மொழிபெயர்த்தார். திருக்குறள் அறத்துப்பாலுக்கு பொழிப்புரை எழுதியுள்ளார். இப்பணிகளைச் செய்யத் தான், தனக்கு ஜென்ம தண்டனை கிடைத்துள்ளது என்றும் வ.உ.சி. கூறியுள்ளார். அவரது தியாகங்களை படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. -பீட்டர் அல்போன்ஸ், மூத்த தலைவர், த.மா.கா. நன்றி: தினமலர், 14/12/2014.