கிரவுஞ்சப் பட்சிகள்
கிரவுஞ்சப் பட்சிகள், கன்னட மூலம் வைதேகி, தமிழில் ஜெயந்தி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 136, விலை 110ரூ.
புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரான வைதேகி எழுதிய 10 சிறுகதைகளின் தொகுப்பு.இச்சிறுகதைகள் எல்லாவற்றிலும் விதவிதமான மனிதர்களைச் சந்திக்க முடிகிறது. வாழ்க்கை மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிட்டிருக்கிறது, எத்தகைய மனோபாவங்களுடன் அலைய விட்டிருக்கிறது என்பதை இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளைப் படித்தாலே தெரிந்து கொள்ளலாம். பல ஆண்டுகள் வாழந்து ஒருவர் பெறும் வாழ்க்கை அனுபவங்களை இக்கதைகளைப் படிப்பதன் மூலம் ஒருவர் பெற முடியும். உட்கார இடம் கிடைக்குமா? என்று கேட்கும் ஏழைப் பெண்ணிடம் எரிந்து விழும் பஸ் கண்டெக்டர் அவளை எவ்வளவுதான் வார்த்தைகளால் சீண்டினாலும், அவள் கோபப்படாமல் சரித்த முகத்துடன் இருப்பதையும், அதனால் எரிச்சலடைந்த கண்டெக்டர், ஓடும் பஸ்ஸிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுவதையும் சித்திரிக்கும் மோதல், தனக்கு வசதியான வாழ்க்கை அமையவில்லையே என்ற தாழ்வுமனப்பான்மையால் பக்கத்துவீட்டுப் பணக்காரப் பெண்ணின் ஒவ்வொரு செயலையும் எதிர்மறையாகப் பார்க்கும் சபிதா, வயல்வெளிகளின் நடுவே பாதையில்லாமல் இருந்த வீட்டுக்கு ரோடு போட்டவுடன் அந்த வீட்டின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களைச் சித்திரிக்கும் வீடு வரை பாதை, வாடகை வீட்டு சமையலறையில் உள்ள அலமாரி, பூஜையறை குடி வருபவர்கள் மாறும்போது எல்லாம் பல்வேறு மாற்றங்கள் அடைவதைச் சித்திரிக்கும் அவரவர் மனதிற்கேற்றபடி சிறுகதை என மனதில் அழுத்தமாக இடம் பிடித்து அமரும் கதைகள் இத்தொகுப்பில் நிறைய உள்ளன. நன்றி: தினமணி, 22/6/2015.