சவீதா நாவல்கள்
சவீதா நாவல்கள், சவீதா, நன்னூல் அகம் வெளியீடு, பக். 1264, விலை 800ரூ, ஐந்து தொகுதிகள், ஒவ்வொரு தனித் தொகுதியின் விலை 225ரூ.
குறுகிய காலத்தில் பிரபலமாகி பெரும் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர், சவீதா. பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய 18 புதினங்கள், 1264 பக்கங்கள் கொண்ட இந்த 5 தொகுதிகளில் வழங்கப்பட்டிருக்கின்றன. வாசிப்போர் மனதில் கதாபாத்திரங்கள் பதிந்து மறக்க முடியாதவர்களாக அவர்கள் மாறிவிட வேண்டும். அந்த வகையில் சவீதாவுக்கு வெற்றியே. திவ்யா, வேணி, பத்மா, அருண் போன்ற பல கதாபாத்திரங்கள் நாவலின் கடைசிப் பக்கத்துக்குப் பிறகும் நம் மனதில் தங்கிவிடுகின்றனர். டாக்டர் ராகவன், ராகவனின் மனைவி ஆண்டாள், வேணி என மூன்றே மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டு, தென்றல் காற்றின் நடையில் எழுதப்பட்டிருக்கும் என் விழியில் உன் முகம்தான் நாவலே இத்தொகுதிகளில் இடம்பெற்றிருக்கும் முதல் நாவல். அதீதக் கடமை வெறியுடன் 24 மணி நேரமும் காக்கிச் சீருடையைக் கழற்றாத காவல்துறை அதிகாரியான அருணைப் பற்றிச் சொல்லும் ஏப்ரல் பறவைகள், மருத்துவக் கல்லூரி வளாகத்தினைக் கதைக்களனாகக் கொண்டிருக்கும் நேசமுள்ள வான்சுடரே, தன் வாழக்கைத் துணைவனை தானே தேடிக்கொள்ளும் திவ்யா மீள முடியாத ஆபத்தில் சிக்கிக்கொள்வதை விவரிக்கும் பூ பூக்கும் காலம், இறந்துபோன தேவையானி உயிருடன் தோன்றும் சஸ்பென்ஸ், திரில்லர் வகையைச் சேர்ந்த தேவையானி நாவல் என உயிரோட்டமான நாவல் உலகங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறார் நூலாசிரியர். நீயும் நானும், ரிவார்டு, இதழோரம் துளி ரத்தம், அழிக்க முடியாத தடயங்கள், ஒரு டயரியின் கைதி முதலிய சுவாரசியமான நாவல்களும் இதில் உள்ளன. இவ்வாறு சுவாரசியமான நாவல்களை, எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய விறுவிறுப்பான நடையில் எழுதியிருக்கிறார் சவீதா. சாதாரண வாசகனையும் இவை சென்றடைந்து அவனை மகிழ்விக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினமணி, 3/8/2015.