ஆபரேஷன் நோவா
ஆபரேஷன் நோவா, தமிழ் மகன், உயிர்மை பதிப்பகம், விலை 150ரூ.
விஞ்ஞானப் பின்னணியில் பிரபல எழுத்தாளர் தமிழ் மகன் எழுதிய நாவல். பூமி இரண்டாகப் பிளந்து உருகி ஓடப் போவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதனால், உலக மேம்பாட்டுக் குழுவினர் கூடி, இன்னொரு கோளில் மனிதர்களை குடியேற்றி, இயன்றவரை மனித குலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. வில்லன் ஒருவன் குறுக்கே வருகிறான். இப்படி விறுவிறுப்பாகச் செல்கிறது கதை. விஞ்ஞானத்தைப் பின்னணியாகக் கொண்ட சினிமாப்படங்கள் ஆங்கிலத்தில் ஏராளமாக வந்திருக்கின்றன. கற்பனைக்கும் எட்டாத அற்புதங்களை, உண்மையில் நடந்த மாதிரி காட்டுவதில் ஹாலிவுட்காரர்கள் மிக்க திறமைசாலிகள். அதேபோல், எழுதுவதற்கு சிரமமான இந்த விஞ்ஞான நாவலை திறமையாக எழுதி படிப்பவர்களை வியக்கச் செய்கிறார், தமிழ்மகன். பாராட்டுக்கு உரிய முயற்சி. நன்றி: தினத்தந்தி, 24/2/2016.
—-
புரட்சிப் பாதையில் புதுமைப்பெண்கள், தேவிச் சந்திரா, மணிமேகலைப் பிரசுரம், விலை 85ரூ.
தன்னலம் கருதாமல் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் டாக்டர், போலீஸ் அதிகாரி, பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியை என பெண்களை பிரதான பாத்திரங்களாக கையாண்டு எழுதப்பட்ட நாவல். சமூக விழிப்புணர்விற்காக சிறு சிறு பாத்திரங்கள் மூலம் கருத்துகளை நூலாசிரியர் தேவிச் சந்திரா முன் வைத்திருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 24/2/2016.