தமிழ்க்காப்பு இயம்
தமிழ்க்காப்பு இயம், புலவர் மீ.காசுமான்,காசுமான் பதிப்பகம், பக்.402, விலை ரூ.200.
செய்யுள் வடிவிலான நமது சங்க இலக்கியங்களை பாமரரும் அறிய உதவியவர்கள் நமது உரையாசிரியர்களே. உரைநடை இலக்கியச் செல்வாக்கு மிகுந்துவிட்ட இக்காலகட்டத்தில், தமிழில் இலக்கண நூல் ஒன்று வெளிவந்திருப்பது, வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
எழுத்து, சொல், பொருள் என தொல்காப்பியம் அமைந்த நிலையில், கால மாற்றத்துக்கு ஏற்ப அதை எழுத்து, சொல், சொற்புணர்ச்சி என நூலாசிரியர் மாற்றத்தைப் புகுத்தி அதற்கான சரியான விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.
தமிழில் எழுத்து மாற்றம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப தோன்றிய புதிய சொற்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அவற்றுக்கான இலக்கணத்தையும் இதில் வகுத்து தரமுயற்சித்திருக்கும் நூலாசிரியரின் பணி போற்றுதலுக்குரியது.
ஒள, வை, ஐ போன்றவற்றை அவ், வய், அய் என எழுதினாலும், பழைய எழுத்துகளும் அவசியம் என்பதையும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
புணர்ச்சி மயக்கம், பிறமொழியாக்கவியல் எனும் தலைப்பிலான கருத்துகள் தமிழை அடுத்த நூற்றாண்டுக்கு ஏற்ற மொழியாக அமைக்கும் முயற்சியாகும். நூலாசிரியரே கூறுவது போல, காலப் போக்கையும், மொழி வளர்ச்சியையும், தடைகளையும் உணர்ந்தே இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.
நன்றி : தினமணி, 25/4/2016.