தமிழர் புத்தகங்கள் ஓர் அறிமுகம்
தமிழர் புத்தகங்கள் ஓர் அறிமுகம், தொகுப்பாசிரியர் சுப்பு, விஜயபாரதம்
பிரசுரம், பக்.504, விலை ரூ.200.
ஒரு மொழியைப் பயன்படுத்துவது குறைந்து கொண்டே வருகிறது என்றால், அந்த மொழி அழிவை நோக்கிச் செல்கிறது என்று சொல்லலாம். தமிழில் தொன்மையின்
தொடர்ச்சியாக, தேசியத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காக்கும் படைப்புகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு, வாழும் தமிழின் போக்குகளையும், வாசிக்கும் அன்பர்களின் விரிவான தேடலையும் இணைக்கும் விதமாக, இந்த நூலைத் தொகுத்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளரான சுப்பு.
சுகி.சிவம் முதல் வ.வே.சு. வரை தமிழின் முன்னணி எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பலர் இதில் தங்கள் கட்டுரைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு வகையில் இதை தமிழ்ப்பற்று என்ற நாரால் தொடுக்கப்பட்ட பல மலர்களின் கதம்பம் எனலாம்.
அ.ச.ஞானசம்பந்தம், ம.வே.பசுபதி, ஆர்.பி.வி.எஸ்.மணியன், பிரேமா நந்தகுமார், சுவாமி விமூர்த்தானந்தர், தஞ்சை வெ.கோபாலன், பத்மன், பேராசிரியர் இரா.ஸ்ரீநிவாசன், வெங்கட்சாமிநாதன், சுகா, திருப்பூர் கிருஷ்ணன், இந்திரா செளந்தர்ராஜன் உள்ளிட்ட நூறு பேரின் 108 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
எழுத்தாளர் குறித்த சிறு அறிமுகத்தை ஒவ்வொரு கட்டுரையின் பின்பகுதியிலும்
அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பழந்தமிழ் இலக்கியங்கள், நவீன
இலக்கியங்கள், தமிழ்ச் சான்றோர்கள், நூல் அறிமுகம் போன்ற பலதரப்பட்ட பகுப்புகளில் கட்டுரைகள் இருந்தாலும், அவை முறையாகத் தொகுக்கப்படவில்லை.
பொருளடக்கத்தில் எழுத்தாளர்களின் பெயர் இல்லை. இந்தக் குறைகளை அடுத்த பதிப்பில் சரி செய்வது அவசியம்.
வாசிப்புதான் மனிதன் மிருகமல்ல என்பதற்கான அத்தாட்சி என்று தனது கட்டுரையில் கூறுகிறார் ஆன்மிகப் பேச்சாளர் சுகி.சிவம். வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் நூல் இது.
நன்றி : தினமணி, 25/4/2016.