வெண்ணிறக் கோட்டை

வெண்ணிறக் கோட்டை , துருக்கி நாவல், ஓரான் பாமுக், ஆங்கில மூலம் விக்டோரியா ,ஹோல்ப்ரூக், தமிழில் ஜி.குப்புசாமி, காலச்சுவடு பதிப்பகம், பக்.176, விலை ரூ.165.

2006-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் தி ஒயிட் கேஸில் நாவலின் தமிழ் வடிவமே வெண்ணிறக்கோட்டை.

வெனிஸ் நகரிலிருந்து நேப்பிள்ஸ்க்கு புறப்பட்டுச் செல்லும் கப்பலொன்றை துருக்கிய கடலோடிகள் சிறைப்பிடித்து, அதிலுள்ள பயணிகளை இஸ்தான்புல்லுக்கு அழைத்துச் சென்று அடிமைப்படுத்துகின்றனர். அவ்வடிமைகளில் ஒருவன், மத மாற்றத்துக்கு உடன்படாததால் பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு அவனைப் போலவே உருவத்தையொத்த ஒருவனிடம் விற்கப்படுகிறான்.

இவ்விருவரும் இணைந்து வானியல், ரசாயனம், உயிரியல் உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு துருக்கிய சுல்தானின் கவனத்தை ஈர்க்கின்றனர். சிறிது காலத்துக்குப் பிறகு சுல்தானின் நம்பிக்கையை அடிமை பெறுகிறான். அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள சில முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியடைகிறான்.

அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துக்கொண்டு தன்னுடைய தாயகம் திரும்புகிறானா அல்லது துருக்கியிலேயே தன்னுடைய வாழ்நாளைக் கழிக்கிறானா? எஞ்சிய வாழ்நாளை அவன் எவ்வாறு கழிக்கிறான் என்பதோடு நாவல் முடிவடைகிறது.

ஒரே மாதிரியான உருவம் கொண்ட ஆண்டைக்கும் அடிமைக்கும் இடையே நடைபெறும் உணர்வுப்பூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள், நிகழ்வுகள் நம்மை நெகிழ்விக்கின்றன. 17-ம் நூற்றாண்டில் துருக்கிய ஆட்சிமுறை, அரசியல் சதிகள், போர் முறைகள், மூடநம்பிக்கைகள், புதிய கண்டுபிடிப்புகளின் மீது துருக்கிய சுல்தானுக்கு இருந்த ஆர்வம், சுருக்கமாகச் சொல்லப் போனால் அன்றைய வாழ்க்கை நம் கண்முன்னே நிகழ்கிறது.சிறந்த மொழிபெயர்ப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

நன்றி : தினமணி, 25/4/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *