செவ்வியல் இலக்கிய மகளிரும் மரபுசார் வாழ்க்கையும்

செவ்வியல் இலக்கிய மகளிரும் மரபுசார் வாழ்க்கையும்,  பதிப்பாசிரியர்  த.மலர்க்கொடி, அய்யா நிலையம்,  பக். 296, விலை ரூ.300.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரித் தமிழ்த்துறை உயராய்வு மையமும் இணைந்து (மூன்று நாள்கள் மார்ச் (4-6, 2015) நடத்திய கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

பண்டைத் தமிழர்களுடைய வாழ்க்கை, மரபு வழிப்பட்ட வாழ்க்கை. சங்ககாலம் தொடங்கி,இக்காலம் வரை அவர்கள் நடைமுறைப்படுத்திய மரபுகள் சில கொள்ளப்பட்டன; சில தள்ளப்பட்டன. இதற்குக் காரணம், தலைமுறை இடைவெளி என்றுகூடச் சொல்லலாம். மேலும், ஆணாதிக்கம் தலைதூக்கி இருந்த சங்க காலத்திலும்கூட மகளிர் பலர் ஆடவர்க்கு இணையாகப் பலவகையிலும் எவ்வாறு பல்வேறு செயல்களைச் செய்து காட்டினர் என்பதற்கான சான்றுகள் இத்தொகுப்பில் உள்ளன.

இதிலுள்ள 27 கட்டுரைகளில், முப்பொருள் (முதல், கரு, உரி) பற்றிய விளக்கம்,
களவியல், கற்பியல்களில் மகளிரின் பங்கு, மகளிர் செய்து வந்த தொழில்கள்,
அவர்களிடமிருந்த ஆளுமைப் பண்புகள், புலமைத்திறம், கற்பு, போர், இசை, நம்பிக்கை, ஆடல், வழிபாடு, விளையாட்டு, குடும்ப உறவு, ஒழுக்கம், கலை முதலியவை பற்றிய சான்றுகளும் விளக்கங்களும் உள்ளன.

மகளிர் மட்டுமல்ல, இலக்கிய ஆர்வலர்கள் பலரும் படித்துப் பயனடையும் விதத்தில் இதிலுள்ள கட்டுரைகள் உள்ளன. ஆனால், நூலின் பக்கங்களைவிட நூலின் விலை அதிகமாக இருப்பதால், குறிப்பாக மகளிர் இதை வாங்கிப் படிப்பார்களா என்ற ஐயம் எழுகிறது. இதுபோன்ற கருத்தரங்கக் கட்டுரைத் தொகுதிகள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்தால் நூலின் தரம் மேம்படும்.

நன்றி: தினமணி, 23/4/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *