ராமாயணம்
ராமாயணம், தேவி வனமாலி, தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் , பக்.320, விலை ரூ.275.
பெண் துறவியும், எழுத்தாளருமான தேவி வனமாலி, ஸ்ரீ ராம்லீலா என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம் இது. மொழிபெயர்ப்பு என்றாலும் மூலத்தைப் படிப்பதைப் போன்ற விறுவிறுப்புடன் தமிழாக்கம் செய்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம்.
எல்லாருக்கும் தெரிந்த வால்மீகி ராமாயணத்தின் சுருக்கமான வடிவம்தான் இந்நூல். அதனை நூலாசிரியர் கொடுத்திருக்கும் விதம் சிறப்பு என்றால், அவர் எழுதியிருக்கும் முன்னுரை மிகச் சிறப்பு. ராமபிரானின் குணாதிசயங்கள் குறித்து எழுந்துள்ள சில சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் விளக்கவுரையாக முன்னுரை மலர்ந்திருக்கிறது.
ராமபிரானின் குணநலன், எந்த நிலையிலும் தர்மத்தைக் கடைப்பிடித்து (கொள்கைப்பிடிப்புடன்) வாழ்வதே. சுயநலத்துக்காக ராமர் ஒருபோதும் கொள்கையை விட்டுக் கொடுத்ததில்லை. அதனால்தான் தந்தை தசரதர் வனவாசம் செல்லுமாறு கூறியபோது முகம் சுளிக்காமல் சென்றார். இதேபோன்று தனிப்பட்ட முறையில் தமது மனைவி சீதாதேவியின் கற்பு குறித்த தெளிவு இருந்தபோதிலும், அரசனின் மனைவி நாட்டு மக்களுக்குத் தனது தூய்மையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதனால்தான் அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னார் என்று ஏற்கும் வகையிலான வாதங்களை முன்னுரையில் நூலாசிரியர் முன்வைக்கிறார்.
ராமர் ஏன் வாலியைக் கொன்றார், தாடகை வதம் ஏன் போன்றவற்றுக்கும் முன்னுரையில் விளக்கம் அளித்துள்ளார். முன்னுரையே
இப்படி வசீகரித்தால் முழு நூலும் எப்படி இருக்கும்? ராமர், லட்சுமணர், சீதை, ஹனுமன் உள்ளிட்ட பாத்திரப் படைப்புகளின் உன்னதத்தையும் அவர்கள் ஏன் தெய்வீகப் புருஷர்கள் என்பதையும் நன்கு உணர்த்தும் வகையில் நூல் அமைந்துள்ளது.
நன்றி: தினமணி, 23/4/2016.