மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை
மேக்நாட் சாகா ஒரு புரட்சிகர விஞ்ஞானியின் கதை, தேவிகாபுரம் சிவா, பாரதி புத்தகாலயம், பக்.288, விலை ரூ.230.
இந்தப் பேரண்டம் தோன்றிய சில விநாடிகளில் நிகழ்ந்தது என்ன? அது எப்படி இருந்தது? என்பதை அறிய நமதுநாட்டில் தோன்றிய விஞ்ஞானி மேகநாட் சாகாவின் வெப்ப அயனியாக்கக் கோட்பாடு பயன்பட்டிருக்கிறது. வளி மண்டல அடுக்கான அயனி மண்டல ஆய்விலும் சாதனை நிகழ்த்தியவர் சாகா. அவருடைய வாழ்க்கை வரலாறு இந்நூல்.
இந்திய அணு ஆராய்ச்சியின் முன்னோடியாக சாகா இருந்தார். “அறிவியல் ஆராய்ச்சி மக்களுக்கானது; அது வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்’ என்பது சாகாவின் கருத்து. இதை அன்றைய பிரதமர் நேருவிடம் சொல்லவும் சாகா தயங்கவில்லை. ஆனால் அணு ஆராய்ச்சித்துறையை மிகவும் ரகசியமாகச் செயல்பட வைத்தார் நேரு.
“ராணுவ நோக்கத்துக்காக அணுசக்தியை மேம்படுத்தும் திட்டம்
இல்லாதபட்சத்தில் அதில் ரகசியத்தன்மை எதற்கு?” என்று கேட்டார் சாகா.
“தற்காலத்தில் நாட்டை நிர்வாகம் செய்ய சட்டம், ஒழுங்கு எவ்வளவு முக்கியமோ,
அவ்வளவு முக்கியம் அறிவியலும் தொழில் நுட்பமும்’ என்ற கருத்தைக் கொண்டிருந்த சாகா, 1952 இல் கல்கத்தா வடமேற்குத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதன்முதலாக ஓர் அறிவியலாளர் பொதுத்தேர்தலில் நின்று, நாடாளுமன்ற உறுப்பினாரானார் என்ற பெருமையைப் பெற்றார்.
மிகவும் பின்தங்கிய பின்னணியில் பிறந்து வளர்ந்து, பல அவமானங்களுக்கும், பின்தள்ளல்களுக்கும் உள்ளான சாகா, அதற்காகவெல்லாம் மனம் கலங்காமல்,
மக்களுக்காகவே அறிவியல் என்ற தனது கோட்பாட்டிற்காக இறுதி வரை போராடினார் என்பதே இந்நூல் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தரும் செய்தி.
நன்றி : தினமணி, 25/4/2016.