தி லைப் அண்டு டைம் ஆப் என்.டி.வானமாமலை
தி லைப் அண்டு டைம் ஆப் என்.டி.வானமாமலை, வழக்கறிஞர் எஸ். அருணாச்சலம், ஆல் இந்தியா பப்ளிக் ரைட்ஸ் புரொடக்ஷன், ஆர்கனைசேஷன் வெளியீடு, பக். 320, விலை 200ரூ.
விழுதுகள் வாழ்த்தும் விருட்சம்
தமிழில் நூலாசிரியரால், ‘கரை சேர்க்கும் உயிர் துடுப்பாய்’ என்னும் தலைப்பில் வெளியான நூல், தற்போது ஆங்கிலத்தில் மொழி மாற்றம் பெற்றுள்ளது. முற்போக்குச் சிந்தனையும், தொண்டுள்ளமும் நிறைந்த மூத்த வழக்கறிஞரின் வாழ்க்கை வரலாற்று நூல். என்.டி.வி., என்று அன்புடன் அழைக்கப்படும் என்.டி. வானமாமலை, ஒரு வழக்கறிஞன் சடர்விட்டுப் பிரகாசிக்கத் தேவையான அயராத உழைப்பு, தோழமை, முடிவெடுக்கும் ஆற்றல், நேர்மை, தைரியம், சொல்வன்மை, சாதுர்யம் ஆகிய ஏழுகுணங்களையும் (பக். 158) ஒருங்கே கைவரப் பெற்றவர்.
ஏறக்குறைய 60 ஆண்டு காலம், வழக்கறிஞராகப் பணியாற்றிய அவர் ஒரு சரணாலயம், ஏராளமானோரைப் பயிற்றுவித்த பல்கலைக்கழகம். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், வைதீகக் குடம்பத்தில் பிறந்து, கம்யூனிச இயக்கத்தால் கவரப்பட்டு, பூணூல், குடும்பைத் துறந்து, பாட்டாளிகளுக்காகப் பல வழக்குகளை நடத்தி, ஆதிக்க வர்க்க சதி வழக்குகளை முறியடித்தவர். லார்டு டென்னிங் வரையறுத்துள்ள (பக். 118) வழக்கறிஞருக்கான இலக்கணங்களைக் கொண்டவர் என்று பாராட்டும் நூலாசிரியர்.
என்.டி.வி., யின் இளமைக் கால வாழ்வில் இருந்து, எம்.ஜி.ஆர்., ராதா வழக்கில், 6 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தது உள்ளிட்ட பல சுவையன தகவல்களோடு, அவர் மறைந்த பிறகு நீதிபதிகள், மன்றத்தில் சூட்டிய புகழாரம் வரையில், 61 சிறு சிறு கட்டுரைகளாக, மிக நேர்த்தியான ஆங்கில நடையில் எழுதியுள்ளார்.
குற்றவியல் துறையில் நீண்டநாள் கோலோச்சிய மூத்த வழக்கறிஞரின் சிறப்புகளை, அவரிடமே கற்று பின் நீதிபதிகளானவர்கள் புகழாரம் சூட்டியிருப்பதும் சிறப்பு. என்.டி.வி., க்கு பெருமை சேர்க்கும் நல்லதொரு ஆக்கப்பூர்வமான பணியாகும்.
-பின்னலூரான்.
நன்றி: தினமலர், 29/5/2016.