நமனை விரட்டும் நாட்காட்டி
நமனை விரட்டும் நாட்காட்டி, நா. துரைசாமி, அனைத்தண்ட இராமலிங்கர் சன்மார்க்க சுத்த மாயா சித்தர் பீடம், பக். 432, விலை 210ரூ.
அருட்பிரகாச வள்ளலார் சுமார் 51 ஆண்டுகள் இப்பூமியில் வாழ்ந்துள்ளார். அந்த 51 ஆண்டுகளில் அவர் வாழ்வில் நடந்த அற்புதங்களும், அவர் வெளியிட்ட கருத்துகளும் சிறு சிறு குறிப்புகளாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலின் முதல் பகுதியில், அருட்பிரகாசர் அகவல் வடிவில் எழுதிய – இதுவரை ஏட்டில் வராத – பிரபஞ்ச ரகசியமும் அதற்கான எளிய விளக்கமும் தரப்பட்டுள்ளது.
இரண்டாம் பகுதியில், அனல், தீ, நெருப்பு ஆகியவற்றால் எப்படி நன்மைகள் பெறுவது என்கிற ரகசியம் இடம்பெற்றுள்ளது. மூன்றாம் பகுதியில் அருளால் அருள் பெறுவது எப்படி என்கிற ரகசியம் விளக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பக்கத்திற்கும் இரு பாடல்கள் (காலையில் ஒன்று, மாலையில் ஒன்று), அவற்றிற்கான விளக்கம் மற்றும் எளிய மூலிகைப் பயன்பாடு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனால், நமனை விரட்ட முடியும் என்று ஆசிரியர் உறுதி கூறுகிறார்.
பாடல்களில் தமிழ் கொஞ்சுகிறது (“புனலினும் புனலாய் புனலிடைப் புனலாய் அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி’). பெயரைக் கேட்டாலே பயப்படக்கூடிய பல நோய்களை, மிக எளிமையான முறையில் சில செடிகளின் இலை, பூ, வேர், கிழங்கு ஆகியவற்றைக் கொண்டே குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். நூலின் இறுதிப் பகுதியில், வள்ளலாரின் பிறப்பு முதல் அவரது இறுதிக்காலம் வரை நிகழ்ந்த அற்புதங்கள் ஆண்டுவாரியாகக் கொடுக்கபட்டிருப்பது மிகவும் சிறப்பு.
ஆயினும் இது போன்ற தொகுப்பு நூல்களுக்கு பொருளடக்கம் இன்றியமையாதது. அது இந்நூலில் இடம் பெறாதது ஒரு குறையே.
நன்றி: தினமணி, 12/9/2016.