உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு
உன்னை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு, அப்துல் கலாம், விகடன் பிரசுரம், பக். 269, விலை 145ரூ.
“ஒவ்வோர் இளைஞனுக்கும் வாழ்க்கையில் நிச்சயம் ஒரு லட்சியம் வேண்டும். அதை நிறைவேற்ற விடாமுயற்சியோடு கடுமையாக உழைக்க வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும்‘’ என்று இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்பதற்காக நூலாசிரியர் அழுத்தம் திருத்தமாக திரும்பத் திரும்ப கூறியிருப்பது, புத்தகத்தை ஆழமாகப் படிக்கத் தூண்டுகிறது.
தவிர, 2020-இல் இந்தியா ஒளிர வேண்டும் என்ற தனது கனவை மெய்ப்படுத்த விவசாயம், அறிவியல், வியாபாரம், தொழில்நுட்பம், சூற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் மேலாண்மை, நதிநீர் இணைப்பு என எல்லாத் துறைகளைப் பற்றியும் விளக்கி, அவற்றிற்குத் தகுந்த நிஜ உதாரணங்களையும் தொகுத்துத் தந்திருப்பது சிறப்பு.
நூலாசிரியர் கலந்து கொண்ட நிகழ்வுகளிலிருந்து 30 நிகழ்வுகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்துத் தந்திருப்பது அருமை. ஒவ்வொரு நிகழ்வின் முன்பும் நூலாசிரியரின் படங்களுடன், அவரது கருத்தை ரத்தினச் சுருக்கமாக படத்துடன் தந்திருப்பது நூலுக்கு வலுச்சேர்க்கிறது. இருந்தாலும் அவை வண்ணப் படங்களாக இல்லை என்ற குறை எழுகிறது. அது நியாயம்தானே!
நன்றி: தினமணி, 12/9/2016.