காக்கியின் டைரி
காக்கியின் டைரி, பெ. மாடசாமி, நேசம் பதிப்பகம், பக். 240, விலை 200ரூ.
காவல்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி, உதவி ஆணையராக ஓய்வு பெற்றவர் நூலாசிரியர். காவல்துறை பணியில் தனது அனுபவங்கள் – காவல்துறையில் பணிபுரிந்த, புரியும் தனது நண்பர்களின் அனுபவங்கள் – ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூலை எழுதியிருக்கிறார்.
காவல்துறையில் பணிபுரிபவர்கள் சந்திக்க வேண்டிய பல்வேறு சவால்கள், சுமக்க வேண்டிய சுமைகள், அவர்களுடைய பல்வேறு பணிநெருக்கடிகள் ஆகியவற்றை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும்.
பலவிதமான குற்றங்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், அவர்களைப் பிடிக்க, சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறையினரின் நடவடிக்கைகள் என ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு சிறுகதை படிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
பகட்டாக உடையணிந்து அடுக்குமாடி வீடுகளுக்குச் செல்லும் அழகான ஒரு பெண் எப்படித் திருடினார்? ஒவ்வொரு முறை திருடியதும் இந்த வீட்டில் திருடியவன் நான்தான், முடிந்தால் பிடித்துப் பார் என்று எழுதிச் செல்லும் திருடன், இரவு எட்டரை மணிக்கு வந்து பூட்டிய பங்களாக்களில் திருடும் ஒரு நபர் பிடிபட்டது, “கைராசியான ஜோதிடர் நீங்கள்; நகைக்கடைக்கு வந்து நகை வாங்கிக் கொடுங்கள்” என அழைத்துச் சென்ற ஒருவர், நகையைத் திருடிக் கொண்டு சென்றுவிட, திருடப்பட்ட நகைகளுக்கு ஜோதிடர் நஷ்ட ஈடு கொடுத்த கதை என படிக்கச் சுவாரஸ்யமாக இருக்கும் இந்தக் கதைகள் தரும் படிப்பினைகள், குற்றங்களால் பாதிக்கப்படாமல் நாம் எப்படி விழிப்போடு இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கின்றன.
அதோடு, காவல்துறையில் மனிதாபிமானத்தோடு செயல்படும் பலரைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி: தினமணி, 10/10/2016.