நவீன ஜோதிடம் ஜாதகப் பலன்கள் கூறும் கலையை விளக்கும் பேராசான்
நவீன ஜோதிடம் ஜாதகப் பலன்கள் கூறும் கலையை விளக்கும் பேராசான், எஸ். அன்பழகன், அன்பு பப்ளிஷிங் ஹவுஸ் இந்தியா, பக். 884, விலை 750ரூ.
ஜோதிட சாஸ்திரத்தில் கோள்களின் முக்கியத்துவம், ஜாதகங்களைக் கணிக்கும் முறைகள், நவக்கோள்களின் காரகத்துவங்கள், ராசி மண்டலத்தில் அமைந்துள்ள ராசிகள், அவற்றின் அதிபதிகள், ராசிகளுக்கான நட்சத்திரங்கள், அவற்றின் பாதங்கள், லக்னத்தைக் கணிக்கும் விதம், நவாம்சம் மூலம் ஜாதகங்களின் பலன்களைத் துல்லியமாகக் கணித்தல் என பல விவரங்கள் இந்த நூலில் பயனுற அமைந்துள்ளன.
ராசிகள், லக்னங்கள், பன்னிரண்டு பாவங்களுக்கான பொதுப் பலன்கள், அந்த பாவங்கள் அல்லது வீடுகளுக்கான அதிபதிகளின் குணங்கள் மற்றும் செயல்பாடுகள், அந்த பாவங்களில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் காரகத்துவங்கள் என பல முக்கிய விதிகள், கோட்பாடுகளை ஜோதிடம் கற்பவர்கள் புரிந்து பயன்பெறும் வகையில் அளித்துள்ளார் நூலாசிரியர்.
பன்னிரண்டு பாவங்களிலும் அமர்ந்திருக்கும் கிரகங்கள் மற்றும் கிரகச் சேர்க்கையினால் ஏற்படும் பலன்கள், யோகங்கள், கிரகங்களின் தசைகள், கோச்சாரம், ஆரூடம் போன்றவையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஜாதகரின் உடல் அல்லது தோற்றம், மனம், அவர்களுக்கான குடும்பம், தாய், இளைய உடன்பிறப்புகள், வீரம், வீடு, நிலம், வண்டி வாகனம், கல்வி அமையும் வாய்ப்பு, புத்தி, புத்திரர்கள், மூதாதையரின் ஆசிர்வாதம், கடன், நோய், திருமணம், நண்பர்கள், கூட்டுத்தொழில், ஆயுள், திடீர் அதிர்ஷ்டம், பாக்கியம், தந்தை, வணங்கும் தெய்வம், வேலை, தொழில் வாய்ப்பு, லாபம், மூத்த உடன்பிறப்புகள், விரயம், பயணம் ஆகிய பன்னிரண்டு பாவங்களின் காரகத்துவங்களையும் முழுவதுமாகக் கற்றுத் தெளிந்து பயனுறும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்நூல், ஜோதிட அகராதி என்று சொன்னால் மிகையாகாது.
நன்றி: தினமணி, 10/10/2016.