நாராய் நாராய்
நாராய் நாராய், ஆட்டனத்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 148, விலை 115ரூ.
கடந்த 2015-லிருந்து தற்போது வரை விஜயபாரதம், உயிர் எழுத்து, தாமரை, கணையாழி, ஓம்சக்தி முதலிய இதழ்களில் நூலாசிரியர் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு இது.
வனத்துறை அலுவலராகப் பணியாற்றிய ஆட்டனத்தி, தனது பணி அனுபவங்களை அருமையான நடையில் சிறுகதைகளாக வடித்துத் தந்திருக்கிறார். நூலின் தலைப்பான “நாராய்… நாராய்…‘’ என்பது 13 கதைகளுள் ஒன்று.
நூலைப் படித்தால், காடு, மலைகளைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். காடுகளில் உள்ள உயிரினங்களின் பெயர்கள், அவை அனைத்தின் குணாதிசயங்கள், மரங்களின் பெயர்கள் என… வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.
சந்தனமரக் கடத்தலுக்கு “வெச்சகுறி‘’, கிணற்றில் விழுந்த மயிலைக் காப்பாற்றும் “முத்துப்பாண்டி‘’, யானைப் பிரசவம் சொல்லும் “புனரபி ஜனனம்‘’, வழிதவறி வரும் யானைகளை அறிய “சர்ச் லைட்‘’, சிறுத்தை வேட்டையைப் பற்றிச் சொல்லும் “மனுஷி‘’, பறவைகளுக்கான மருத்துவம் சொல்லும் “நாராய் நாராய்…‘’ ஒவ்வொரு கதையும் காட்டுக்குள்ளேயே வாழ்ந்த அனுபவத்தைக் கொடுக்கிறது.
தமிழ் எழுத்துலகில் அவசியமானதாகக் கருதப்படும் சூழலியல் எழுத்தாளர்களின் பட்டியலில் ஆட்டனத்திக்கு முன்வரிசையில் இடம் இருக்கிறது என்பதுதான் இச்சிறுகதைத் தொகுப்பு சொல்லும் செய்தி.
நன்றி: தினமணி, 10/10/2016.