சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா
சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா, செந்தமிழ்த்தாசன், இளைஞர் இந்தியா புத்தகாலயம் வெளியீடு, பக். 160, விலை 120ரூ.
வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்க முன்பு ஒரு விடுதலைப்போர் நடந்ததைப் போல், இன்று நமது அரசியல் கொள்ளையரிடமிருந்து நாட்டை மீட்க மீண்டும் ஒரு விடுதலைப் போர் நடந்தாக வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார் இந்நூலாசிரியர்.
ஆன்மீகம், அரசியல், கல்வி, கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம், மதச்சார்பின்மை… என்று பல துறைகளில் உயர்ந்த நிலையை உலகிற்கு வழங்கிய இந்தியா, இன்று நமது அரசியல்வாதிகளால் மதவெறி, ஜாதிவெறி, இனவெறி, மொழிவெறி, சுயநலம், ஊழல், லஞ்சம், பாலியல் குற்றங்கள்… மலிந்து கீழான நிலைக்கு எவ்வாறு தள்ளப்பட்டுள்ளது என்பதற்கான காரணங்களை இந்நூலில் குறிப்பிடுகிறார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்தியா தலை நிமிரட்டும், பகல் கொள்ளைக்காரர்கள் இனி தேவையில்லை, சும்மா வந்ததா சுதந்திரம், புதிய பாரதம் படைப்போம், சிலிர்த்தெழும் இளைஞர் இந்தியா என்று இந்நூலில் உள்ள 16 கட்டுரைகளும் தேசப்பற்றை வலியுறுத்தக் கூடியவையாக உள்ளன.
காந்தி, நேரு, காமராஜ், கக்கன், நேதாஜி, பகத்சிங், மகாகவி பாரதி, ஸ்வாமி விவேகானந்தர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முதலான பல தலைவர்களின் எண்ணங்களையும், செயல்பாடுகளையும், தியாகங்களையும் அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் ஆங்காங்கே குறிப்பிட்டு, இத்தகைய தலைவர்களால் வழி நடத்தி உருவாக்கப்பட்ட இந்தியா, இன்று எவ்வாறு சீரழிக்கப்படுகிறது என்பதை ஆசிரியர் இந்நூலில் விளக்குவது, படிப்பவர்களுக்கு – குறிப்பாக இளைஞர்களுக்கு தேசம் குறித்த விழப்புணர்வை ஏற்படுத்துகிறது. இது போன்ற நூல்கள் வரவேற்கத்தக்கவை.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 4/1/2017.