குளத்தூர் ஜமீன் கதை
குளத்தூர் ஜமீன் கதை, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, விலை 175ரூ.
தமிழ்நாட்டின் முந்தைய ஜமீன்தார்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதில் மக்களுக்கு நெருக்கமாகவும், அணுக்கமாகவும் வாழ்ந்தவர்கள் பலருண்டு. அவர்களை உள்ளது உள்ளபடி எழுதிப்போவதில் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னணியில் இருக்கிறார்.
ஆடம்பரம் இல்லாத எழுத்து அவரிடம் இருக்கிறது. பரபரக்கிற எளிய மொழி கைவசம் இருக்க, முழு வீச்சில் குளத்தூர் ஜமீன் கதையை எழுதியிருக்கிறார். ஜமீன்தார்களின் நேர்த்தி, நடைமுறை, பழக்கவழக்கங்கள் என எல்லாமே 162 பக்கங்களில் பரவிக்கிடக்கிறது. அவர்கள் பயன்படுத்திய ராலே சைக்கிள், கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன.
குளத்தூர் ஜமீன்தாரர்களின் வாழ்க்கைக் கதை சம்பவங்களில் நிறைந்திருக்கிறது. ஒரு திரைக்கதைக்கு நிகரான வாழ்வியல் சித்திரங்கள். மகாத்மா காந்தி இங்கே வந்து சற்றே இளைப்பாறி இருக்கிறார். அவர்கள் காலத்திலிருந்து இன்றுவரைக்கும் எவ்வளவோ நடந்திருக்கிறது.
ஒரு நாவல் மாதிரியான நடையோட்டம். காமராசு பற்றியும், அவருக்குப் பழக்கமான ஜமீனின் வாரிசுகளைப் பற்றியும் ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார் வண்ணதாசன். அது அந்தப் புத்தகத்திற்கே ஒரு அணிகலன். ‘முன்னோர்களின் சரித்திரம் வசீகரமானது’ என்பதன் சான்றே இந்தப் புத்தகம்.
நன்றி: குங்குமம், 25/12/2016.