குஜிலிப் பனுவல்கள்

குஜிலிப் பனுவல்கள், க.விஜயராஜ், நறுமுகை,  பக்.238, விலை 180ரூ.

“குஜிலிக் கடை’‘ – அந்தி நேரக் கடை என்பது, பழைய சென்னைப் பட்டணத்தில் இருந்த கடைவீதியைக் குறிப்பிடுவது. வெகுஜன ரசனைக்கு ஏற்ப தயாரான புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் அங்கு கிடைக்கும். இந்தப் புத்தகம் அப்படிப்பட்ட புத்தகங்களைப் பற்றியதாகும்.

இவற்றில் பலவற்றின்நோக்கம் சிற்றின்பக் கிளர்ச்சி. ஆசிரியரின் தகவல் அடுக்குகளில் “தலைகாணி மந்திரம்’‘, “குடியர் ஆனந்தப்பதமும் கெஞ்சாவின் ஆனந்தக் களிப்பும்‘’, “புகையிலையின் வெண்பாவும்’‘ ஏன் காலம் கடந்து நிற்கவில்லை என்பதைப் பெயர்களைப் பார்த்தே முடிவு செய்து கொள்ளலாம்.

யார் இயற்றிய புத்தகமானாலும் அதன் தரம்தான் காலத்தை விஞ்சி நிற்கச் செய்யும். இப்போதும் மறைவில் படிக்கும்படியான சிற்றின்பப் புத்தகங்களை எவராவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். வெகுஜன விருப்பத்துக்குட்பட்டு இருப்பதனால் அதை வைத்துக் கொண்டாட முடியுமா?

பிற்சேர்க்கையில் முழுப் பாடல்களாக உள்ள நகல்கள் படிக்கும் வகையில் தெளிவாக இல்லை. “ஐகோர்ட்டின் அலங்காரச் சிந்து‘’ என்ற பாடலை முழுமையாக 7 பக்கங்களில் தந்தாலும், அதைப் படிக்க முடியாதபடியாக மோசமான பிரதியெடுப்பு. வேறு சில பிரதியெடுப்பும் அவ்வாறே. யாருக்காக இந்தப் புத்தகத்தை ஆசிரியர் இயற்றினார்? மிகவும் நுனிப்புல் மேய்ந்த, வெறும் தகவல் அடுக்கான நூலாக இருக்கிறது.

ஒரு வேளை இன்று சிற்றின்பச் சிற்றிலக்கியம் ஒரு சிறு பண்டிதக் குழுவுக்குப் பயன்படலாம். இந்தப் புத்தகம் ஒரு சாதாரண வாசகனுக்கு என்ன பயன் தரும்? தூசு தட்டி வைத்துக் கொண்டால், முனைவர் பட்டத்துக்குப் பயன்படலாம்.

நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் கண்ணீர் பெருகுகிறது’ என்று குஜிலி நூல்கள் பற்றி திரு.வி.க. நொந்து கொண்டதிலிருந்தே அவை காலத்தால் ஏன் ஒதுக்கப்பட்டன என்று தெரிந்து கொள்ளலாம்.

நன்றி: தினமணி, 30-1-2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *