பிரயாணம்

பிரயாணம், பாவண்ணன், காலச்சுவடு,  பக்.216, விலை ரூ.190.

பாவண்ணன் 1984இல் இருந்து எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 சிறுகதைகளின் தொகுப்பு.

நம்மைச் சுற்றி வாழ்கிற பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை, மன உணர்வுகளை மிகவும் அற்புதமாகச் சித்திரிக்கும் சிறுகதைகள் ஒவ்வொன்றும் நமக்குக் காட்டும் உலகு வித்தியாசமானது. நாம் அறிந்து கொள்ள வேண்டியது.

வயதான காலத்தில் எந்த வருமானமும் இல்லாமல், எந்த ஆதரவும் இல்லாமல், ரெஜிஸ்டர் ஆபிஸில் யாருக்காவது சாட்சிக் கையெழுத்துப் போட்டு அதில் எப்போதாவது கிடைக்கும் சொற்பக் காசில் தன்னுடைய, தன் மனைவியினுடைய பசியைப் போக்கும் முதியவர், கல்யாணம் ஆன ஒரே மாதத்தில் கணவன் வெளிநாடு செல்ல, கைக்குழந்தையுடன் வாழ்க்கையின் வெம்மையை அனுபவிக்கும் இளம்பெண், தமிழ்நாட்டில் வாழ வழியில்லாமல் கர்நாடக மாநிலம் ஹோஸ்பெட்டில் கட்டும் துங்கபத்ரா நதி அணையில் வேலை செய்யச் சென்ற ஒருவர், பல ஆண்டுகள் கழிந்த பின்னாலும், தன் மகனுக்கு ஏதாவது “கூட்டற வேலை… பெருக்குற வேலை‘’ க்காக ஒருவரிடம் கெஞ்சும் வறுமைநிலையோடு வாழ்வது என அடித்தட்டு மக்களின் அவல வாழ்க்கை இச்சிறுகதைகளில் அற்புதமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சைக்கிள் ஓட்ட ஆசைப்படும் சிறுவன், தனது கிளிக்கு கூண்டு வாங்க முடியாமல் ஏங்கும் சிறுவன், கணவனுக்குப் பயந்து ஒரு குழந்தைக் கண்ணன் பொம்மையை வாங்க முடியாமல் தவிக்கும் பெண், ஆட்டோ ரிக்ஷா வந்ததால் வேலையில்லாமல் போன குதிரை வண்டிக்காரர்கள், துவைக்கும் நீர்நிலைகளை வலிய மனிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதால் பாதிக்கப்பட்ட சலவைத் தொழிலாளிகள், காசுக்காக எந்த வேலையையும் செய்யத் தயாராக உள்ள மனிதர்கள் என இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் வெவ்வேறு உலகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன; சிந்திக்க வைக்கின்றன.

நன்றி: தினமணி, 30-1-2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *