மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை
மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை, மு. நியாஸ் அகமது, விகடன் பிரசுரம், பக். 192, விலை 140ரூ.
“நான் பல நரகங்களைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறேன்‘’- இது தனக்கு மிக நெருங்கியவர்களுடன் ஜெயலலிதா பகிர்ந்து கொண்ட வாசகம். அந்த நரகங்கள் எவை, அவற்றை எப்படித் தாண்டிக் குதித்துத் தப்பித்து வந்தார் என்பதை விவரிப்பதுதான் இந்த நூல்.
இரண்டாவது வயதில் தந்தையை இழந்தது, தாயார் வேதவல்லி, “சந்தியா’‘ என்கிற பெயர் தாங்கி படங்களில் நடித்தது, சர்ச் பார்க் கான்வென்டில் ஜெ.யின் படிப்பு, நாட்டியத்தில் அவரது ஆர்வம் – தேர்ச்சி, புத்தகம் படிப்பதில் உள்ள ஆர்வம், மருத்துவர் ஆக வேண்டும், ஆட்சிப்பணியாளர் ஆக வேண்டும் என்ற கனவு – ஆசை. அவர், விரும்பாமலேயே நடிக்க வந்தது – விரும்பாமலேயே எம்.ஜி.ஆர். முயற்சியால் அரசியலுக்கு வந்தது உள்ளிட்ட அவரது வாழ்க்கை நிகழ்வுகள்
அனைத்தும் அவரது வாழ்வின் இறுதிக் காலம் வரை இந்நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
ஜெ. தனது வாழ்வில் பல அவமானங்களைச் சந்தித்திருக்கிறார். அவற்றால் ஏற்பட்ட காயங்களால் அவர் சோர்ந்து ஓய்ந்துவிடவில்லை. தன்னைக் கிண்டல், கேலி செய்தவர்கள், அவமானப்படுத்தியவர்கள், தன்னை ஒழித்துக்கட்டியே தீருவது என்று தீவிரமாய் முயன்றவர்கள் – என அவர்கள் அனைவரையும் தன் காலில் விழ வைத்தவர் மட்டுமல்ல; தன்னைத் திட்டியவர்களையே துதிபாட வைத்தவர் என்றும் நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆளுமைப் பண்பே பெண்கள் மத்தியில் இவரை ரோல் மாடலாக ஆக்கியது; இவரை “அம்மா’‘ என்று கொண்டாட வைத்தது என்றும் இந்த நூல் நிறுவுகிறது.
இந்த நூல் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கவில்லை. பழைய வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போதே, சமகால நிகழ்வுகளும் வரும்.
மீண்டும் மூன்று பத்திகளில் பின்னோக்கிப் பயணிக்கும். கவனமுடன் படிக்க வேண்டும். ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அனைவருக்கும் இந்த நூல் பிடிக்கும்
நன்றி: தினமணி, 13/3/2017.