இலை உதிர்வதைப் போல

இலை உதிர்வதைப் போல, இரா.நாறும்பூநாதன், நூல் வனம், பக்.192, விலை ரூ.150.

வாழ்க்கை முழுக்க மனிதன், சக மனிதர்களுடன், இடங்கள், மரங்கள், செடி, கொடிகளுடன், வளர்ப்பு பிராணிகளுடன் எல்லாம் தொடர்புடையவனாக இருக்கிறான். வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நெருக்கடிகளினால் சில தொடர்புகளை மனிதர்கள் விட்டுப் பிரிகிறார்கள்.

புதிய தொடர்புகள் வாழ்க்கையில் ஏற்படுகின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள 26 சிறுகதைகளில் வரும் மனிதர்கள் எல்லாரும் இந்தத் தொடர்புகளின் அருமையை உணர்ந்தவர்கள். தொடர்புகளைவிட்டுப் பிரிய மனமில்லாதவர்கள்.

சக மனிதர்களை மட்டுமல்ல, செடியை, மரத்தை, ஆடு, மாடுகளை, இடங்களைப் பிரிய நேர்ந்தால், மனதின் ஆழத்திலிருந்து வழியும் கண்ணீரைத் தடுக்க முடியாதவர்கள்.

பாப்பம்மாள் என்ற ஆச்சி (ஒற்றைப் பனை&#39யாக வாழ்கிறாள். முதிய வயதில் இருக்குமிடத்தில் ஆதரிக்க யாருமில்லாததால், மதுரையில் உள்ள அண்ணன் வீட்டுக்குச் செல்ல நினைக்கிறாள். அப்போது அவளுடைய வீட்டுக்கு விருந்தினராக வரும் தம்பி மகன் குடும்பத்தைப் பார்த்ததும், தன் இடம் பெயரும் எண்ணத்தைக் கைவிட்டு, உறவுகளின் அன்பில் நெகிழ்ந்து போகிறாள். இது இத்தொகுப்பில் உள்ள முதல் கதை.

திருமண விழாவில் நாயனம் வாசிக்கும் நாகுப்பிள்ளை குழுவினர், ஒரு திருமணத்தில் வாசித்துவிட்டுச் சாப்பிடாமல், இன்னொரு திருமண விழாவில் வாசிக்கச் செல்கின்றனர். கூட்டம் அலைமோதியதால் அங்கேயும் சாப்பிட முடியவில்லை. அப்போது நாகுப்பிள்ளை நாயனம் வாசிப்பதை ஒருவர் மிகவும் புகழ்கிறார். பசியை மறந்து அந்தப் புகழ்ச்சியில் சிலிர்த்துப் போகிறார் நாகுப்பிள்ளை. இது செய்யும் தொழிலில் நெகிழ்ந்து போவது. இது இத்தொகுப்பில் உள்ள இறுதிக் கதை.

இவ்வாறு இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளும், தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றின் மீதும் மனிதன் அன்பாக இருப்பதுதான் அவனை உயிர்ப்போடு வைக்கும் என்பதை உணர்த்துகின்றன. வறண்ட மனதில் மழையாகப் பெய்யும் சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

நன்றி:தினமணி, 10/4/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *