ஜெய்ஸ்ரீராம்
ஜெய்ஸ்ரீராம், மஞ்சுளா ரமேஷ், ஸ்ரீபப்ளிகேஷன்ஸ், பக். 664, விலை 600ரூ.
ஞான ஆலயம், சினேகிதி ஆகிய மாத இதழ்களின் ஆசிரியரான இவர், குங்குமம், தினமலர், சாவி, மங்கையர் மலர் போன்ற பத்திரிகைகளிலும் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர். தவிர, இயல், இசை, நாடக மன்றம், திரைப்படத் தணிக்கைக் குழ, திரைப்படத் தேர்வுக்குழு, தொலைக்காட்சியின் தேர்வுக்குழு போன்ற அரசு சார்பான குழக்களிலும் செயலாற்றியதோடு, யோகக்கலையைப் பயின்று பலருக்கு யோகா பயிற்சிகளையும் கற்றுத் தருகிறார்.
இவர் இதற்கு முன் பாரத கண்டம் (பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், நேபாளம், திபேத், பங்களாதேஷ், இலங்கை உள்பட) முழுவதும் பரவிக் கிடக்கும் 51 சக்தி பீடங்களுக்குப் பயணம் சென்று, ஞான ஆலயத்தில் எழுதிய ஆன்மீக அனுபவக் கட்டுரைகள் எல்லாம் தொகுக்கப்பட்டு வெளியான ‘51 சக்தி பீடங்கள்’ என்ற நூல் வாசகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற, விற்பனையிலும் சாதனை படைத்தது.
அடுத்ததாக, அயோத்தி முதல் இலங்கை வரை ராமாயணம் நடந்த பல்வேறு ஸ்தலங்களுக்கும் நேரடியாகப் பயணம் சென்று தரிசித்த ஆன்மிக அனுபவங்களையும், அந்தந்த ஸ்தலங்களோடு சம்பந்தப்பட்ட ராமாயணக் கதைகளையும் இணைத்து, படிப்பவர்கள் பரவசப்படும் ஒரு புதுமையான பயணக் கட்டுரைகளும் ஞான ஆலயத்தில் வெளியாகி வாசகர்களை கவர்ந்தது.
அக்கட்டுரைகளும் தற்போது ஏழு பாகங்களாக தொகுக்கப்பட்டு, வண்ணப் புகைப்படங்கள், வரைபடங்களுடன் சுமார் 650-க்கும் மேற்பட்ட பக்கங்களில் இந்நூல் வெளியாகியுள்ளது. ராமாயணக் கதையையே ஒரு புதிய கோணத்தில் படிக்கும் ஆர்வத்தை இந்நூல் தூண்டுவதை உணரமுடிகிறது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 19/4/2017.