பயணம் – சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி

பயணம் – சிரியாவின் சிதைந்த இதயத்தை நோக்கி,  சமர் யாஸ்பெக், தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ், எதிர் வெளியீடு, பக்.344, விலை ரூ.320

சிரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நூலாசிரியர் தற்போது வசிப்பது பாரிஸ் நகரில். எனினும் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருக்கும் தாய்நாடான சிரியாவுக்கு யாருக்கும் தெரியாமல் துணிச்சலுடன் நான்கு முறை எல்லைத் தாண்டிச் சென்று, சிரியா மக்களின் இன்றைய அவல வாழ்க்கையை இந்நூலில் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

சொந்த மக்களின் மீதே வெடிகுண்டுகளை வீசுகிற அரசுக்கும், மரண வெறி கொண்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அல்லல்படும் மக்களைப் பற்றிக் கூறும் இந்நூல், நமது உணர்வுகளை உறைய வைக்கிறது.

பெண்களின் சுதந்திரம் முற்றிலும் சிரியாவில் மறுக்கப்பட்டிருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் போன்ற படைக்குழுக்கள் சிரியாவில் வருவதற்கு முன்பு முகத்தை மறைக்காமல் தெருவில் நடந்து செல்லும் பெண்கள் நிறையப் பேர் இருந்தனர். இப்போது எல்லாரும் முகத்தை மறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

முதலில் அரசியல் ஊர்வலங்களில் பேரணிகளில் பெண்கள் கலந்து கொண்ட நிலை மாறி, தற்போது அவ்வாறு கலந்து கொண்டால், எறிகணைகளால் தாக்கப்படும் நிலை உருவாகிவிட்டது.

பதினாறு வயது மிகாத குழந்தைகள் ஆயுதங்களைச் சுமந்தபடி இரவு நேரத்தில் இருள்சூழ்ந்த தெருக்களுக்குள் மறைகிறார்கள். குடும்பங்கள் இங்கே வாழ்க்கையைத் தேடி, கொல்லும் வானத்தின் கீழே, தீவிரவாத படைப்பிரிவுகளின் காட்டுமிராண்டித்தனத்திற்கு இடையே மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன என சிரியாவின் இன்றைய நிலையைத் துல்லியமாக நூல் சித்திரிக்கிறது.

இவ்வளவு மோசமாக சிரியாவின் மக்களுடைய வாழ்க்கை இருந்தாலும், இஸ்லாமிய தேசம் என்ற மத சிந்தனை இல்லாமல், மக்களுக்கான மதத்தைத் தாண்டிய தேசத்தை அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்காகப் போராடுபவர்களும் சிரியாவில் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை நூல் விதைக்கிறது.

நன்றி: தினமணி, 26/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *