சைவ சித்தாந்த நன்னெறி

சைவ சித்தாந்த நன்னெறி, ச.சௌரிராசன், மணிவாசகர் சிவநெறி அறக்கட்டளை, பக்.528, விலை ரூ. 350.

‘சைவ சமயமே சமயம்39’ என்று கூறிய தாயுமானவர் பாடலில் தொடங்கி, சைவ சமயத்தின் அடிப்படைச் செய்திகள், குரு மரபு, சைவ சித்தாந்த சாத்திரங்கள், மும்மல இயல்பு, பாச நீக்கம், சிவப்பேறு உள்ளிட்ட பல்வேறு செய்திகளையும் பதினைந்து பகுதிகளாகப் பிரித்து விளக்கியுள்ளார் ஆசிரியர்.

சைவ சித்தாந்தம் குறித்து ஏற்கெனவே அதிகம் சொல்லப்பட்ட செய்திகளை ஓரளவுக்குத் தொட்டுக் காட்டிவிட்டு தாதான்மிய சம்பந்தம், பஞ்ச சக்திகள், அருவ, உருவ, அருவுருவ வடிவங்கள், சுத்தாத்துவிதம், இருபத்தைந்து விதமான மகேசுவர மூர்த்திகள் – போன்றவற்றைத் தெளிவாகவும் ஆழமாகவும் விளக்கியிருப்பது சிறப்பு.

மேலும், வேதாந்த மகா வாக்கியமான ‘சோகமஸ்மி 39’ என்பதும் சித்தாந்த மகா வாக்கியமான‘சிவோகமஸ்மி 39’ என்பதும் ஒன்றே என்பதையும் இந்திரியங்கள் தன்மாத்திரைகளை இயல்பாகக் கொண்டு புலன்களை அறியும் என்பதையும் விளக்கமாகக் கூறியிருப்பது சைவ அன்பர்களுக்கு மிகவும் பயன் தரும் செய்திகள்.

ஆசிரியர் தனது கருத்துகளுக்கு மேற்கோள்களாக தேவார, திருவாசகப் பாடல்களை அதிகம் பயன்படுத்தாமல் சிவஞான போதம், சிவஞான சித்தியார், உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன் முதலிய சைவ சித்தாந்த சாத்திர நூல்களைப் பயன்படுத்தியிருப்பது அந்நூல்கள் குறித்த அறிமுகமாகவும் அமைந்துள்ளது.

முப்பத்தாறு தத்துவங்கள், ஆறு அத்துவாக்கள், 224 புவனங்கள், பஞ்ச பிரம்ம மந்திரங்கள், சடாங்க மந்திரங்கள் போன்றவற்றைப் பட்டியலிட்டிருப்பது வாசிப்பை எளிமையாக்குகிறது.

அணைந்தோர் என்று அறியப்படும் சீவன் முக்தர்கள் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ள கட்டுரை சிறப்பு. சைவ சித்தாந்தத்தை அறிய விரும்புவோர்க்கு மட்டுமல்லாது, அத்துறையில் அனுபவம் மிக்கோருக்கும் பயன் தரும் நூல் இது.

நன்றி: தினமணி, 2/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *