அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகள்
அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகள், மவ்லவி பி.எம்.கலீலூர் ரஹ்மான், எஸ்.கே.எஸ். பப்ளிஷர்ஸ், பக். 192, விலை 100ரூ.
சென்னை பள்ளிவாசல் ஒன்றில் இமாமாகப் பணியாற்றும் இந்நூலாசிரியர், இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்கள் பல எழுதி பிரசித்திப் பெற்றவர். இவர் முன்னாள் ஜனாதிபதியான ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் இஸ்லாமிய ஈடுபாடுகளைச் சேகரித்து இந்நூலில் தொகுத்துள்ளார்.
அப்துல் கலாம் இஸ்லாமியராக இருந்தும், அந்த முறையில் அவர் வாழவில்லை என்ற கோணத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சில எழுப்பிய விமர்சனங்கள், எவ்வளவு தவறானவை என்பதை தக்க ஆதாரங்களோடு, குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையிலும் விளக்கியுள்ளார்.
அன்பு, ஒழுக்கம், உண்மை, நேர்மை, எளிமை, பணிவு, திறமை, விடாமுயற்சி, சுயநலமின்மை, தூயத் தொண்டாற்றும் உள்ளம், தேசப்பற்று, எளியவர்களை ஆதரிக்கும் தன்மை, பிறரை மதிக்கும் தன்மை… என்று பொது வாழ்க்கைக்கு உரிய இலக்கணமாகத் திகழ்ந்தவர் அப்துல் கலாம்.
இவை எல்லாம் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்தவை. இந்த நெறிகளின்படி கலாம் எப்படி வாழ்ந்தார் என்ற தகவல்களை எல்லாம் ஆசிரியர் இந்நூலில் விரிவாக பதிவு செய்துள்ளார். அது மட்டுமின்றி அவர் ஐவேளை தொழுகையை கடைப்பிடித்திருக்கிறார்.
அவர் ஜனாதிபதியாக இருந்தபோது பலருக்கும் தெரியாமல் மக்கா சென்று உம்ரா செய்திருக்கிறார். தினமும் குர் ஆன் ஓதி இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை புரிந்திருக்கிறார். இப்படி திரைமறைவில் நல்ல முஸ்லிமாக வாழ்ந்திருக்கிறார். இவை எல்லாம் கலாமின் குடும்பத்தாரிடமே இந்நூலாசிரியர் சென்று சேகரித்த தகவல்கள்.
பல மதங்கள், பல இனங்களைக் கொண்ட மதச் சார்பற்ற நம் நாட்டில், பிற மதத்தினரும் பாராட்டும் வகையில் சிறப்புமிக்க ஜனாதிபதியாகவும் திகழ்ந்திருக்கிறார். எந்தப் பதவியுமின்றி கலாம் மறைந்தபோது, இந்திய நாடே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
இது அவருக்கு மட்டுமல்ல, இஸ்லாத்திற்கும் கிடைத்த பெரும் பாராட்டுதான் என்பதை இந்நூலின் மூலம் அறிய முடிகிறது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 11/10/2017.