கேணி

கேணி, கோபால்தாசன், நீலம் பதிப்பகம், பக்கம் 120, விலை.120ரூ.

கேணி கவிதை தொகுப்பு, கவிஞர் கோபால்தாசன் சிந்தனையின் ஊற்று . பல்வேறு பத்திரிகைகளில் அவர் எழுதிய கவிதைகளை தொகுத்து நூலாக தந்திருக்கும் கோபால்தாசன் கற்பனை வளமிக்கவர் என்பதற்கு இந்த தொகுப்பு ஒரு சான்றாகும். எழுகின்ற கற்பனையை எழுத்தில் அவர் கோர்த்திருக்கின்ற விதம் வாசிப்போரை நேசிக்க வைக்கும் என்றால் அது மிகையில்லை.

கவிதை என்பது வாழ்வின் பிம்பம். காலத்தின் கண்ணாடி. மொழியின் சுவை, என்பதை இவரின் ஒவ்வொரு கவிதைகளிலும் கண்டு கொள்ள முடிகிறது. வாழவைக்கும் பண்டிகை என்ற கவிதையில் இவர் பண்பாடு, கலாச்சாரத்தை பதிவு செய்து இருக்கிறார். தமிழனுக்கு என்று ஒரு குணம் உண்டு என்பதை மீண்டும் உறுதிபடுத்தி நாட்டின் வளமையை எல்லோரும் உணரச்செய்திருக்கிறார்.

அதே போல் தீபத் திருநாள் பற்றி பேசுகிற கவிதையில்

தீபம் பலர் வாழ்வில் எண்ணெயின்றியே
எரிந்து கொண்டிருப்பது ஆச்சரியம் என்று சொல்லி நம்மை வியப்புக்குள்ளாகி இருக்கிறார்.பண்பாடு கலாச்சாரம் பற்றியும் நம் பண்டிகைகள் பற்றியும் எழுதிய கவிஞர், உரிமைக்கு குரல் கொடுடா தமிழா என்று தமிழர்களின் வீரத்தையும் கொஞ்சம் தட்டி எழுப்புகிறார்.

உணவின்றி உறக்கமின்றி
கடல்தாண்டி போனாலும்
உயிருக்கு மதிப்பேதடா
தமிழா நம் உயிரென்ன
பறவையா மிருகமாடா

– என்று இன்றைய நிகழ்வுகளுக்கு எதிராக கோபத்தின் விளிம்பில் நின்று கொந்தளிக்கவும் செய்கிறார்.

நேசம், காதல், கோபம், கொண்டாட்டம், பண்பாடு கலாச்சாரம் என பல்வேறு சுவைகளை ஒருங்கே தொகுத்து நம் சிந்தனைகளையும் உற்றுக் கிணறாக மாற்றும் ஒரு அருமை தொகுப்புதான் இந்த கேணி, கவிஞர்களும், கவிதைகளை நேசிப்போர்களும் மட்டும் இன்றி அனைவருமே வாசிக்க வேண்டிய தொகுப்பு இது. கவிதைகளை போற்றுவோம். கவிஞரை வாழ்த்துவோம்.

நன்றி: தினமணி, 18/12/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *