திருக்குறள் விளக்கம் (திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்)
திருக்குறள் விளக்கம் (திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்), விளக்கவுரை: கிருஷ்ணாம்பேட்டை கி.குப்புசாமி முதலியார்; பதிப்பாசிரியர்: ஜெ.மோகன், இரண்டு பாகங்கள்,வெளியீடு: சிவாலயம்,பக்.1735, விலை ரூ.1800 (இரண்டு பாகங்களும்).
திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால், காமத்துப்பால் மற்றும் அறத்துப்பால் தொகுப்புரை ஆகிய நான்கு பகுதிகள் – இரண்டு பாகமாகப் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன.
பரிமேலழகர் உரைக்கு விரிவான விளக்கவுரை தந்தவர்களுள் வேதாந்த நோக்கில் உரை வகுத்தவர் கோ.வடிவேலு செட்டியார். சித்தாந்தம் திங்களிதழின் ஆசிரியரான, கி.குப்புசாமி முதலியாரோ சித்தாந்த நோக்கில் திருக்குறளை அணுகியிருக்கிறார்.
மிகச்சிறந்த உரை விளக்கம் மட்டுமல்ல, மிக எளிமையான உரையும்கூட பொறிவாயில் ஐந்தவித்தான் என்ற குறளுக்கு ‘ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு,செவி என்னும் ஐந்தின் வழி ஓடுகின்ற ஐந்து ஆசையென்றும், அவ்வித ஐந்து ஆசைகளையும் அறுத்தான் இறைவனென்றும், அவ்விறைவன் உயிர்கள் பொருட்டு ஓதிய நூல்களில் உள்ள ஒழுக்கநெறியில் சிறிதும் வழுவாது நிற்பவர் எவராயினும் பிறப்பு, இறப்பு அற்ற அவ்விறைவன் திருவடியின் நிழலில் சென்று எக்காலத்தும் துன்பம் நீங்கி ஒரு தன்மையாகவே வாழ்வார்களென்றும் விரித்துக் கூறினர்.
இக்குறளால் இல்லறத்தாராக இருப்பவர், நிலையிற்றிரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது என்றபடி தமக்கு உள்ள மனைவியரோடு ஐம்புலன்கள் ஆரத்துய்த்து, பிறன்மனை நயவாதும், பரத்தையர்ப் புணராதும் நிற்றல் வேண்டுமென்றும், பின்னர் இல்லறத்தில் வெறுப்புற்றுத் துறவவறத்தையடைந்த காலத்தே தவம் பூண்டு, கூடாவொழுக்கம் நீத்து நிற்றலே ஒழுக்கநெறி என்றுங் கண்டோம் என்று கூறும் கி.குப்புசாமி முதலியார், மணிவாசகப் பெருமானின் திருவாசகப் பாடலான தனியனேன் பெரும்பிறவிப் பெவத் தெவ்வத் என்ற பாடலையும், ஆனை வெம்போரில் குறுந்தூரெனப் புலனால் அலைப்புண்டு என்ற பாடலையும் மேற்கோள் காட்டி விளக்கியிருப்பது மிகவும் சிறப்பு.
பெண்ணின் பெருந்தக்க யாவுள என்ற குறளுக்கு நளவெண்பாச் செய்யுள்கள் இரண்டையும் மேற்கோள் காட்டி விளக்கியிருப்பது கூடுதல் சிறப்பு. இப்பதிப்பு நூலை உலகெலாம் பரவும் வழி செய்தல் வேண்டும்.
நன்றி: தினமணி, 18/12/2017.